ரேசன் கடை கட்டிடம் இருக்கு... ஆனால் கடை இல்லை 

நொச்சிகுளம் - வடக்கு ஆலங்குளம் பகுதியில் ரேசன்கடையை  திறக்க வேண்டும்.

திமுக மாவட்ட செயலாளர் கோரிக்கை.

 


 

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட நொச்சிகுளம் ஆலங்குளம் வடக்குப் பகுதியில் அரசு ரேசன்கடை கட்டிடம் கட்டி பல ஆண்டுகளாகியும் இன்று வரை அந்த கட்டிடத்தில் ரேசன் கடை திறக்கப்படவில்லை. எனவே அந்தப் பகுதி மக்களின் நலன் கருதி உடனடியாக நொச்சிகுளம் ஊராட்சி - ஆலங்குளம் வடக்கு பகுதியில் அரசு பகுதிநேர ரேசன் கடை திறக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவருக்கு நெல்லை மேற்கு மாவட்ட திமுக செயலாளர் வழக்கறிஞர் பொ.சிவபத்மநாதன் கோரிக்கை விடுத்துள்ளார்

 

அந்த கோரிக்கை மனுவில் அவர் கூறியிருப்பதாவது:- 

 

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட நொச்சிகுளம் ஊராட்சி, வடக்கு ஆலங்குளம் என்ற ஊரில் கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு இந்தப் பகுதி மக்களின் கோரிக்கையை ஏற்று அன்றைய தமிழக அமைச்சர் சொ.கருப்பசாமியின் சட்டமன்ற தொகுதி வளர்ச்சி நிதி மூலம் புதிய

ரேசன் கடை கட்டடம் கட்டப்பட்டது.

 

 ஆனால் இதுவரை அந்தக் கட்டடம் திறக்கப்படவில்லை. பல்வேறு வகைகளில் பொதுமக்கள் பல்வேறு போராட்டங்கள் நடத்தியும் எந்த வித நடவடிக்கையும் இதுவரையில் எடுக்கப்படவில்லை. இதற்கிடையில் அந்த கட்டடம் பழுதடைந்து சீர்குலைந்த நிலையில் இருந்ததை ஊர் பொதுமக்கள் சார்பில் ரூபாய் ஒன்றரை லட்சம் செலவு செய்து அதனை பழுதும் செய்துள்ளார்கள். ஆனால் ரேசன்கடை மட்டும் இன்றுவரை திறக்கப்படவில்லை .

 

இதற்கு காரணம் விசாரித்தபோது தாய் கடை நொச்சிகுளத்தில் உள்ளது .நொச்சிகுளம், வடக்கு ஆலங்குளம் இரண்டு பகுதியிலும் சேர்த்து 350 குடும்ப அட்டைகள் தான் உள்ளது. வடக்கு ஆலங்குளத்தில் மட்டும் 140 கார்டுகள் மட்டும் உள்ளது. இந்த  140 கார்டை பிரித்தால் தாய் கடையில் 210 கார்டுகள்தான் இருக்கும். எந்த அடிப்படையில் வட க்கு ஆலங்குளத்திற்கு பல ஆண்டுகளுக்கு முன்பே மறைந்த அமைச்சர் கருப்பசாமி  தனி ரேசன் கடையை கட்டிக் கொடுத்தார் என்பது கேள்விக்குறியாக இருக்கிறது.

 

  ஒரு கடையில் இருந்து மற்றொரு கடையை பிரிக்க வேண்டுமென்றால் தாய் கடையில் 500  கார்டுகளும் கிளை கடையில் 150 கார்டுகளுக்கும் இருக்க வேண்டும் என்றும் ,அரசு விதி  மேலும் தாய் கடைக்கும் கிளை கடைக்கும் இடையே குறைந்தது 2 கிலோமீட்டர் தூரம் இருக்க வேண்டும் என்றும்  சில அரசு அடிப்படை விதிகள் இருக்கிறது. ஆனால் இந்த விதிமுறைகள் எல்லாம் தெரியாமலா?அல்லது மக்களை ஏமாற்றும் நோக்கத்திலோ? பகுதிநேரக் கடை உங்களுக்கு நான் தந்துவிட்டேன் என்று சொல்லி தேர்தலில் அதிமுக வாக்கு கேட்டு தொடர்ந்து அந்த தொகுதியில் வெற்றி பெற்று வந்துள்ளது. 

 

இந்நிலையில் அந்த பகுதி மக்கள் தங்கள் எதிர்ப்பை அரசுக்கு காட்டும் வகையில் கடந்த 4 மாதமாக வடக்கு ஆலங்குளம் பொதுமக்கள் ரேசன் பொருட்களை வாங்கவில்லை. தற்போது ஊர் பொதுமக்கள் தொடர்ந்து போராடியதன் அடிப்படையில் சங்கரன்கோயில் வட்டாட்சியர் தலைமையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு ஒவ்வொரு மாதமும் இரண்டு நாட்கள் வடக்கு ஆலங்குளத்தில் கட்டப்பட்டுள்ள ரேஷன் கடையில் வைத்து பொதுமக்களுக்கு குடிமை பொருட்கள் வழங்கப்படும் என்றும், மூன்று மாத காலத்திற்குள் பகுதி நேரக் ரேசன்கடைக்கான உத்தரவை பெற்று தருவதாகவும் அமைதிப் பேச்சுவார்த்தையில் உறுதி அளித்து சென்றுள்ளார்கள் .

 

இது பொது மக்களை ஏமாற்றுவதற்காக செய்த செயலாகவே பொது மக்கள் கருதுகிறார்கள்.காரணம் கடையை பிரித்து உத்தரவு பெறப்படாமல் எப்படி மாதம் இரண்டு நாட்கள் உணவுப் பொருட்கள் வழங்குவார்கள் என்று கேள்வி கேட்கும் நிலை உருவாகி உள்ளது மேலும் கடையையே பிரிக்காமல் அந்த ஊர் மக்களை ஏமாற்றி பல ஆண்டு காலமாக நம்பச் செய்து இதுவரை அந்த ஊருக்கு பகுதிநேரக் கடை வழங்கப்படாமல் இருக்கிற அதிமுக அரசை திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வன்மையாகக் கண்டிக்கிறோம்.

 

 இந்த ஊராட்சி தற்போது வாசுதேவநல்லூர் சட்டமன்ற தொகுதியில் வருகிறது. வடக்கு ஆலங்குளத்திற்கும், நொச்சிகுளத்திற்கும் இடையே  சுமார் 4 கிலோ மீட்டர் தூரம் இருக்கிறது. மற்ற அடிப்படை விதிகளை எல்லாம் தளர்த்திவிட்டு, 4 கிலோமீட்டர் தூரம் தாய் கடைக்கும், கிளை கடைக்கும் இருப்பதை கருத்தில் கொண்டு பகுதி நேரக் கடை அமைத்தால் வடக்கு ஆலங்குளம் பொதுமக்கள் பயன்பெறுவார்கள்.

 

 ஆகையால் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் கருணை கூர்ந்து பல ஆண்டு காலமாக, தனிக்கடை கட்டிக்கொடுத்தும், கடையில் பொருட்கள் வழங்காமல் ஏமாற்றப்பட்டு இருக்கிற வடக்கு ஆலங்குளம் பொதுமக்களின் நலன் கருதியும், ஏற்கனவே தாசில்தார் தலைமையில் பேசி முடிக்கப்பட்டதன் அடிப்படையிலும், 4 கிலோமீட்டர் தூரம் அலையும் பொதுமக்கள் நலன்கருதியும், உடனடியாக  நொச்சிகுளம் ஊரிலிருந்து, வடக்கு ஆலங்குளம் ஊருக்கு பகுதி நேர ரேஷன் கடையை பிரித்து தனி கடை உத்தரவு வழங்கிட அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு நெல்லை மேற்கு மாவட்ட திமுக செயலாளர் வழக்கறிஞர் பொ‌.சிவபத்மநாதன் அந்த கோரிக்கை மனுவில் கேட்டுக் கொண்டுள்ளார். இந்த மனுவின் நகலினை  திருநெல்வேலி நுகர்பொருள் வாணிப கழக முதுநிலை மண்டல மேலாளர் மற்றும் தென்காசி மாவட்ட வழங்கல் அலுவலர் ஆகியோருக்கும் அனுப்பியுள்ளார்.

 

Previous Post Next Post