கொரோனா தனிமைப்படுத்தல் வார்டில் ஆக்சிஜன் தடைப்பட்டு இருவர் மரணம்: கலெக்டர் விஜயகார்த்திகேயன் நேரில் ஆய்வு

திருப்பூர் அரசு மருத்துவமனையில் மின்சார துண்டிப்பால் கொரோனா தனிமைப்படுத்தல் வார்டில் சிகிச்சையில் இருந்த 2 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.திருப்பூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் கொரோனா தனிமைப்படுத்தல் வார்டில் சுமார் 40 நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். 


இந்நிலையில் அதே வளாகத்தில், தனிமைப்படுத்தல் வார்டுக்கு அருகில் மருத்துவக் கல்லூரி   கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது. அதற்கான பள்ளம் தோண்டும் பணியின்போது தனிமைப்படுத்தல் வார்டுக்கு செல்லும் மின் ஒயர்கள் துண்டிக்கப்பட்டது.


இதன் காரணமாக செயற்கை சுவாசம் மூலம் சிகிச்சை பெற்று வந்த நோயாளிகள் மூச்சு விட முடியாமல் திணறி அவதிப்பட்டனர். மேலும் சிகிச்சையில் இருந்த கவுரவன் 69 , யசோதா 67 என்ற இருவரும் ஆக்ஸிஜன் பெறமுடியாமல் உயிரிழந்தனர். இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்ப்படுத்தியது.


இதுதொடர்பாக நோயாளிகளின் உறவினர்கள் மருத்துவ ஊழியர்களிடம் புகார் செய்ய முற்பட்டபோது யாருமே வரவில்லை என புகார் தெரிவித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக சுகாதாரத்துறை செயலர் மாவட்ட ஆட்சியரை நேரில் சென்று ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு உத்தரவிட்டது.


இதனையடுத்து திருப்பூர் அரசு தலைமை மருத்துவமனையை நேரில் ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர் விஜயகார்த்திகேயன்,  கட்டுமான பணியின் போது ஏற்பட்ட விபத்து காரணமாக மின் இணைப்பு துண்டிக்கப்பட்ட தாகவும், அந்த நேரத்தில் இரண்டு பேர் உயிரிழந்து உள்ளனர் எனவும் கூறினார்.


மேலும் அவர் கூறுகையில், ‘ மின் இணைப்பு துண்டிப்பு காரணமாக ஆக்சிஜன் தடைப்படவில்லை என்றும், அந்த நேரத்தில் அவர்கள் இறந்ததால், கட்டுமானப்பணியில் ஈடுபட்ட கான்ட்ராக்டர் மற்றும் அந்த நேரத்தில் அஜாக்கிரதையாக பணியில் இருந்த ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.