திருப்பூரில் போலீஸ் விசாரணைக்கு அழைத்துச்செல்லப்பட்ட வாலிபர் பலி: உறவினர்கள் போராட்டம்

திருப்பூரில் காவல் துறையினர் அழைத்துச் சென்ற வாலிபர் மரணம் அடைந்ததாக கூறி அரசு மருத்துவமனையில் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். திருப்பூர் கே செட்டிபாளையத்தை சேர்ந்தவர் சின்னசாமி மகன் மணிகண்டன் (வயது 34). பனியன் தொழிலாளியான இவர் ஏற்கனவே தனது மனைவியை விவாகரத்து செய்து இருந்த நிலையில், செட்டிபாளையம் பகுதியில் சரண்யா என்ற பெண்ணுடன் வசித்து வந்துள்ளார் என கூறப்படுகிறது.


இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் சரண்யா அவரது தோழிகளுடன் ஏற்ப்பட்ட தகராறில் சுடுதண்ணீர் ஊற்றப்பட்டு காயமடைந்தார்.  சிகிச்சை பெற்று வந்த அவர் இரண்டு நாட்களுக்கு முன்னர் உயிரிழந்தார்.


 இது தொடர்பான விசாரணைக்கு இன்று காலை 7 மணியளவில் மணிகண்டனை திருப்பூர் ரூரல் போலீசார் அழைத்து சென்றனர். சில மணி நேரத்தில் மணிகண்டன் இறந்துவிட்டதாக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று வைத்துவிட்டனர்.


இதையடுத்து மணிகண்டனின் உறவினர்கள்  மணிகண்டனை போலீசார் அடித்து கொன்றதாகவும், அந்த போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் கோரி திருப்பூர் அரசு மருத்துவமனையில் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதனால் அரசு மருத்துவமனை வளாகத்தில் பரபரப்பு நிலவியது. 


இந்நிலையில் கொரோணா வார்டில் இருவர் பலியான சம்பவத்தை விசாரிக்க வந்த கலெக்டர் விஜய கார்த்திகேயனை இறந்து போன மணிகண்டனின் உறவினர்கள் முற்றுகையிட்டனர். 


இதைத்தொடர்ந்து உறவினர்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய கலெக்டர் விஜய கார்த்திகேயன், சி.ஆர்.பி.சி., 176ல் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார். 


இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் களைந்து சென்றனர்.