திருப்பத்தூர் அருகே கேஸ் கசிந்ததால் தீ விபத்து ஒரு லட்சம் மதிப்புள்ள பொருட்கள் சேதம்


 

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை ஒன்றியத்துக்கு உட்பட்ட பெரிய மண்டலவாடி பகுதியில் வசிப்பவர் யுவராஜ் (45). இவரது மனைவி மாலதி (35). இவர்களுக்கு ஒரு ஆண் ஒரு பெண் என இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

 

இவர்கள் பெரியமண்டலவடி பகுதியில் ஒரு வீட்டின் மேல் மாடியில் வசித்து வருகின்றனர். வீடுகளுக்கு வயரிங் வேலை செய்யும் யுவராஜ் வழக்கம் போல வேலைக்கு சென்று விட வீட்டின் மேல் மாடியில் சமையல் செய்து கொண்டு இருந்தார் மாலதி.

 

அப்பொழுது சிலிண்டரில் இருந்து அடுப்புக்கு இணைக்கப்பட்ட கேஸ் டியூப் பழுதடைந்து இருந்ததால் கேஸ் கசிந்து திடீரென்று மளமளவென்று தீப்பற்றி எரிய ஆரம்பித்தது.

 

திடுக்கிட்ட மாலதி உடனடியாக சுதாரித்துக் கொண்டு  சட்டென்று வெளியே விளையாடிக் கொண்டிருந்த தங்களுடைய பிள்ளைகளை தூக்கிக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறி தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவித்தார்.

 

தகவலறிந்த தீயணைப்புத்துறை சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை அணைத்தனர். ஆனாலும் சுமார் ஒரு லட்சம் மதிப்புள்ள பீரோ கட்டில் போன்ற வீட்டு உபயோக பொருட்கள் தீயில் கருகி சாம்பல் ஆயின.

 

இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.