திருப்பூர் தனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சை மையம் அமைக்க வேண்டும் -சு.குணசேகரன் எம்.எல்.ஏ கோரிக்கை


 

திருப்பூர் தெற்கு சட்டமன்ற உறுப்பினர் சு.குணசேகரன் தமிழ்நாட்டு முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமிக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது: 

 

இந்தப் பேரிடர் காலத்தில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் சிகிச்சை பெறுவதற்கு போதுமான மருத்துவமனைகள் திருப்பூர் நகரில் இல்லை. திருப்பூர் மற்றும் கோவை போன்ற நகரங்களில் நோய்த்தொற்று மிக வேகமாக பரவி வருகிறது.

 

ருப்பூர் மாநகரில் ரேவதி மருத்துவமனை மற்றும் குமரன் மருத்துவமனை ஆகிய இரு மருத்துவமனைகளும் கடந்த 25 வருடங்களாக அனைத்து வசதிகளுடன் கூடிய சிறப்பான உயர் சிகிச்சை செய்து வருகின்றனர்.

 

இவ்விரு மருத்துவமனைகளும் தமிழக அரசின் கொரோனா சிகிச்சை மைய அனுமதி பெற்றுள்ளனர். மருத்துவமனைகளில் தனித்தனி சிகிச்சை கட்டிடங்கள் இல்லாததினால் கொரானா சிகிச்சை மையம் அமைக்க இயலவில்லை. ஏற்கனவே உள்ள மருத்துவமனை கட்டிடத்தில் கொரோனா சிகிச்சை மையத்தை அமைத்தால் அங்குள்ள உள் மற்றும் வெளி நோயாளிகள் கடுமையான நோய் தொற்றுக்கு ஆளாவார்கள்.

 

மேற்கண்ட இரு மருத்துவமனைகள் இணைந்து நகரின் மத்தியில் தனியார் விடுதியில் ஆறு படுக்கையுடன் கூடிய தீவிர சிகிச்சை பிரிவு மற்றும் 40 படுக்கைகள் கொண்ட கொரோனா  சிகிச்சை மையத்தை ஏற்படுத்தி உலக சுகாதார மையம் மற்றும் தமிழக அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை முழுமையாக கடைப்பிடித்து மருத்துவ சிகிச்சை அளிக்க பலமுறை மாவட்ட இணை இயக்குனர் (பொது மருத்துவம்) மற்றும் மாவட்ட ஆட்சியர் ஆகியோரிடம் மனு செய்தும் இதுவரை தக்க அனுமதி கிடைக்கப் பெறவில்லை.

 

ஏற்கனவே கோவை ஈரோடு திருச்சி மற்றும் சென்னை போன்ற நகரங்களில் இதுபோன்ற தனியார் விடுதிகளில் கொரோனா சிகிச்சை மைய அனுமதியுடன் கூடிய தரமான சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது. மக்கள்தொகையும் தொழிலாளர்கள் எண்ணிக்கையும் அதிகம் நிறைந்துள்ள கோவை மற்றும் திருப்பூர் நகரங்களில் ஏராளமான நோயாளிகள் தக்க சிகிச்சை மேற்கொள்ள மருத்துவமனைகளில் இடவசதி கிடைக்கப்பெறவில்லை.

 

ஆகவே மேற்கண்ட மருத்துவமனைகளில் இணைந்து தனியார் விடுதியில் கொரோனா சிகிச்சை மையத்தினை ஏற்படுத்தி நோய் தொற்றினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உயர் சிகிச்சை வழங்க அனுமதி வழங்கிட வேண்டுமென மாண்புமிகு முதலமைச்சர் அண்ணன் அவர்கள் ஆவன செய்து தருமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன் இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.