அவிநாசி அருகே விபத்து: லாரியில் சிக்கி 3 பேர் பலி

 அவிநாசி அருகே சேலம்- கோவை ஆறுவழிச்சாலையில் முன்னே சென்ற லாரி மீது பைக் மோதி விபத்துக்குள்ளானதில் பைக்கில் சென்ற மூன்று இளைஞர்கள் சம்பவ இடத்திலேயே பலி.   ஆந்திர மாநிலம் ராஜமுந்திரியிலிருந்து பேப்பர் லோடு ஏற்றிக்கொண்டு கேரள மாநிலம் கொச்சின் நோக்கி லாரி சென்றுகொண்டிருந்தது.  

அவிநாசி அருகே சேலம் - கோவை ஆறுவழிச் சாலையில் வரும்போது பெருமாநல்லூரிலிருந்து அவிநாசி நோக்கி வேகமாக வந்துகொண்டிருந்த பைக் கட்டுப்பாட்டை இழந்து லாரியின் பின்பக்கம் மோதி விபத்துக்குள்ளானது. 

 இதில் ஒரே பைக்கில் வந்த மூன்று இளைஞர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.  இதையடுத்து லாரியை ஓட்டிவந்த ஓட்டுநர் லாரியை ஓரமாக நிறுத்திவிட்டு தப்பியோடினார்.  

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த திருமுருகன்பூண்டி போலீசார் பிரேதங்களை அவிநாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து வாகனங்களை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீர் செய்தனர். 

 விபத்தால் சேலம் -கோவை ஆறுவழிச் சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.  தொடர்ந்து போலீசார் மேற்கொண் விசாரணையில் அவிநாசியை அருகே உமையங்செட்டிபாளையம் பகுதியை சேர்ந்த ரங்கசாமி மகன் முரளி (20), பூச்சந்திரன் மகன் தங்கதுரை (23) மற்றும் தண்டபானி மகன் சுரேஷ்குமார் (23)  ஆகிய மூவரும் ஒரே பைக்கில் பெருமாநல்லூரிலிருந்து அவிநாசி நோக்கி அதிவேகமாக வந்ததும், அதிவேகத்தால் கட்டுப்பாட்டை இழந்த பைக் நிலை தடுமாறி லாரியின் பின்பக்கம் மோதி விபத்துக்குள்ளானதில் லாரியின் பின் சக்கரத்தில் சிக்கியும் அடித்தும் மூன்று இளைஞர்களும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது தெரியவந்தது.  

இந்த விபத்து குறித்து திருமுருகன்பூண்டி போலீசார் வழக்கு பதிவு செய்து மேலும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.