லத்தியால் கொடூரமாக தாக்கிய போலீஸார்; சுருண்டு விழுந்த விவசாயி பலி! - எஸ்ஐ மற்றும் காவலர் கைது.!


குடிபோதையில் இருந்த விவசாயியை, பாதுகாப்புப் பணியில் இருந்த போலீஸார் கொடூரமாகத் தாக்கியதில் விவசாயி பலியானார். இதனையடுத்து லத்தியால் தாக்கிய எஸ்ஐ மற்றும் காவலர் கைது செய்யப்பட்டதுடன், இருவரும் சஸ்பென்ட் செய்யப்பட்டுள்ளனர். 

சேலம் மாவட்டம் வாழப்பாடியை அடுத்த இடையம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் வெள்ளையன் (எ) முருகேசன். விவசாயியான முருகேசன் இடையம்பட்டியில் மளிகைக் கடையும் நடத்தி வந்துள்ளார். கொரோனா தொற்று தீவிரமாக இருப்பதால் சேலம் உள்ளிட்ட 11 மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டிருப்பதால், அருகிலுள்ள கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கு நண்பர்களுடன் சேர்ந்து இருசக்கர வாகனத்தில் நேற்று மாலை முருகேசன் மது அருந்தச் சென்றிருக்கிறார். மது அருந்திவிட்டு நேற்று மாலை வீடு திரும்புகையில், இடையப்பட்டி சோதனைச் சாவடியில் பாதுகாப்புப் பணியிலிருந்த போலீஸார் முருகேசன் மற்றும் அவருடைய நண்பர்களை நிறுத்தி விசாரித்துள்ளனர்.

அப்போது மதுபோதையிலிருந்த முருகேசனுக்கும் போலீஸாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாகச் சொல்லப்படுகிறது. இதில் கோபமடைந்த போலீஸார் முருகேசனை லத்தியால் சரமாரியாகத் தாக்கியுள்ளனர். முருகேசனை அடிக்க வேண்டாமென அவருடைய நண்பர் கெஞ்சிய போதிலும், போலீஸார் காட்டுமிராண்டித் தனமாகத் தாக்கியுள்ளனர்.

போலீஸார் தாக்கியதில் முருகேசன் சம்பவ இடத்திலேயே மயங்கி சரிந்துள்ளார். இந்த சம்பவம் அனைத்தையும் முருகேசனின் நண்பர்கள் மொபைல் ஃபோனில் வீடியோவாக எடுத்திருக்கின்றனர். உடனே 108 ஆம்புலன்ஸ் மூலமாக அருலிலுள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்துச் சென்று முதலுதவி கொடுத்து, ஆத்தூர் அரசு மருத்துவமனையில் முருகேசனுக்கு சிகிச்சை கொடுத்திருக்கின்றனர். மேல்சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தவர், சிகிச்சைப் பலனின்றி இன்று அதிகாலை பரிதாபமாக உயிரிழந்தார்.

ஏத்தாப்பூர் காவல் நிலையம் முன்பு குவிக்கப்பட்டிருக்கும் போலீஸார்

ஏத்தாப்பூர் காவல் நிலையம் முன்பு குவிக்கப்பட்டிருக்கும் போலீஸார்

இந்தத் தகவல் தெரிந்ததும் முருகேசனுடைய உறவினர்கள் சுமார் 200 பேர் ஏத்தாப்பூர் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு, சம்பந்தப்பட்ட போலீஸார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென ஆவேசமாக போராட்டம் நடத்தினர். இந்த சம்பவத்திற்கு உரிய நடவடிக்கை மற்றும் இழப்பீடு கிடைக்கும் வரை மருத்துவமனையிலிருந்து முருகேசனின் சடலத்தை வாங்கப் போவதில்லை எனக் கூறியுள்ளனர். பிரச்னை பெரிதாகாமல் இருக்க ஏத்தாப்பூர் காவல் நிலையம் மற்றும் இடையம்பட்டியிலுள்ள முருகேசனின் வீட்டின் முன்பு ஏராளமான போலீஸார் குவிக்கப்பட்டிருக்கின்றனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு நிலவுகிறது. இந்நிலையில் லத்தியால் அடித்த எஸ்ஐ மற்றும் காவலர் இருவரும் கைது செய்யப்பட்டதையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் தந்தை மகனான ஜெயராஜ் - பென்னிக்ஸ் ஆகிய இருவரும் காவல்துறையினரால் சித்ரவதை செய்யப்பட்டு மரணமடைந்து நேற்றுடன் ஒருவருடம் ஆகிறது. அதேபோல இன்றைக்கு காவல்துறையினரின் தாக்குதலால் முருகேசன் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.