தூத்துக்குடியில் சிக்கிய 23 கிலோ அரியவகை அம்பர்கிரீஸ் - சர்வதேச மதிப்பு ரூ.23 கோடியாம்.!


தூத்துக்குடி கடற்கரை பகுதியில் தூத்துக்குடி மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு உதவி இயக்குனர் கார்த்திகேயன் தலைமையிலான அதிகாரிகள் தூத்துக்குடி கேம்ப்-2 கடற்கரை பகுதியில் ரகசியமாக கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அங்கு வந்த ஒரு காரை நிறுத்தி சோதனையிட்டனர். 

காருக்குள் திமிங்கலத்தின் வாயில் இருந்து வெளியேறும் உமிழ்நீரான 'அம்பர்கிரிஸ்' இருப்பது தெரிய வந்தது. காரில் இருந்த   3 பேரைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

இந்த ஆம்பர்கிரீஸ் திமிங்கலம் குடலில்  சுரக்கக்கூடிய மெழுகு போன்ற திரவம் ஆகும். இந்த ஆம்பர்கிரீஸ் 20 வயதுக்கு மேல் உள்ள திமிங்கலங்கள் உடலில் இருந்து வெளியேற்றப்படுகிறது. உயர்தரமான நறுமண பொருட்கள் தயாரிக்க பயன்படுத்தி வருகின்றனர்.

 குறிப்பாக துபாய் உள்ளிட்ட நாடுகளில் இந்த ஆம்பர்கிரீஸ் அதிக அளவில் நறுமண பொருட்களில் பயன்படுத்தப்படுகிறது.

 எகிப்தியர்கள் பழங்காலத்தில் மருந்து பொருட்களாகவும் பயன்படுத்தியதாக கூறப்படுகிறது. இத்தகைய அரிய வகை ஆம்பர்கிரீஸ் இந்தியாவில் விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டு உள்ளது.

பறிமுதல் செய்யப்பட்ட  23 கிலோ எடை கொண்ட ஆம்பர்கிரீஸின் சர்வதேச மதிப்பு ரூ.23 கோடி என்று கூறப்படுகிறது. 

 சட்டவிரோதமாக அம்பர்கிரீசை கடத்தி வந்ததாக நெல்லை மாவட்டம் மேலப்பாளையத்தைச் சேர்ந்த சதாம்உசேன், தருவையைச் சேர்ந்த பிரபாகரன் மற்றும் தூத்துக்குடி மீனாட்சிபுரத்தைச் சேர்ந்த பெரியசாமி  ஆகிய 3 பேரையும் கைது செய்துள்ளனர்.