கோவில்பட்டியில் தொழில் பூங்கா அமைக்க வேண்டும் என கனிமொழி எம்.பி யிடம் தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் கோரிக்கை.!


தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி தொழிற்பேட்டையில் செயல்படும் தீக்குச்சி தயாரிக்கும் ஆலைக்கு  திமுக மகளிர் அணி செயலாளரும் தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி கருணாநிதி வருகை தந்தார். அங்கு தீக்குச்சிகள் தயாரிக்கும் முறைகளை பார்வையிட்டு, மரத்தடிகள் எங்கிருந்து வருகிறது உள்ளிட்டவைகள் குறித்து கேட்டறிந்தார்.

பின்னர் தீப்பெட்டி ஆலைக்கு சென்று தீப்பெட்டி தயாரிக்கும் முறையை பார்வையிட்டார். அங்கு பணியாற்றும் பெண் பணியாளர்களிடம் குறைகளை கேட்டறிந்தார். தொடர்ந்து கோவில்பட்டி நகராட்சிக்கு சொந்தமான தினசரி சந்தையின் நுழைவாயில் நடைபெறும் பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். 

தொடர்ந்து நகராட்சி அலுவலக கூட்டரங்கில் தீப்பெட்டி உற்பத்தியாளர்களின் கருத்தரங்கில் கனிமொழி எம்.பி. கலந்து கொண்டனர். கூட்டத்தில், தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் கனிமொழி எம்.பி.யிடம் வழங்கிய மனுவில், 

கோவில்பட்டியில் தொழில் பூங்கா அமைக்க பூர்வாங்க பணிகள் நடந்தன. அதன் பின்னர் கிடப்பில் போடப்பட்டது. எனவே, கோவில்பட்டியில் புதிதாக தொழில் பூங்கா அமைக்க வேண்டும். 

மாவட்டத்தில் தொழில் தொடங்குவதில் உள்ள பிரச்சினைகளை களைந்திட, ஒற்றைச் சாளர அடிப்படையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தொழில் செய்வதற்கான விவரங்கள் அடங்கிய மனுக்களை வழங்கி, குறிப்பிட்ட காலவரையறைக்குள் அனைத்து துறைகள் சம்பந்தமான என்.ஓ.சி. மற்றும் அனுமதியை மாவட்ட ஆட்சியர் மூலமாக வழங்கிடவும், 

அதில் ஏதாவது குறைகள் இருந்தால் மாவட்ட ஆட்சியரின் நேரடி பார்வையில் பரிசீலிக்கப்பட்டு அனுமதி வழங்கி உரிய காலத்தில் தொழில் முனைவோர் தொழில் தொடங்க உரிமம் வழங்க ஏற்பாடுகள் செய்ய வேண்டும். 

தீப்பெட்டி தொழில் தடையின்றி நடைபெற, சிட்கோ அல்லது பொது பயன்பாட்டு மையம் மூலம் தீக்குச்சி மரங்கள், மெழுகு போன்ற பொருட்கள் இறக்குமதி செய்ய தர வேண்டும்.

3 மாதங்களுக்கு ஒருமுறை மாவட்ட ஆட்சியர் தலைமையில், தொழில் முனைவோருக்கான குறைதீர் கூட்டம் நடத்த வேண்டும். தீப்பெட்டிக்கு முக்கியப் பொருளான பொட்டாசியம் குளோரேட் மற்றும் சல்ஃபர் ஆகியவற்றை மாவட்டம் விட்டு மாவட்டம் கொண்டு வருவதற்கு மாவட்ட வருவாய் அலுவலரிடம் இருந்து பெற வேண்டிய தடையில்லா சான்றுக்கு விலக்கு அளிக்க வேண்டும்.

பொட்டாசியம் குளோரேட் மற்றும் சல்பர் பல்வேறு மாவட்டங்களிலி இருந்து கொள்முதல் செய்வதற்கு தடையில்லா சான்று பெற வேண்டும் என்ற விதியை ரத்து செய்ய வேண்டும். பெட்டாசியம் குளோரேட் மற்றும் சல்பர் வாங்குவதற்கும்,

இருப்பு வைப்பதற்கும்  வாங்கப்படும் படைக்கால சட்டம் உரிமத்தை 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை புதுப்பிக்க வேண்டும் என்ற விதியை மாற்றி, வாழ்நாள் உரிமமாக வழங்க வேண்டும். மேலும், இவற்றை தேவைக்கேற்ப கொள்முதல் செய்ய அனுமதி வழங்க வேண்டும்.

தொழிற்சாலைகளில் ஏற்படுகின்ற சிறுசிறு விபத்துக்களுக்கு உரிமையாளர்கள் கைது செய்யும் நடைமுறையை தளர்த்த வேண்டும். கோவில்பட்டியில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் பொருட்டு சுற்றுச்சாலை அமைக்க வேண்டும். கோவில்பட்டியை தலைமையிடமாக கொண்டு வருவாய் மாவட்டம் உருவாக்க வேண்டும், என தெரிவித்திருந்தனர்.

இதற்கு பதிலளித்து பேசிய கனிமொழி எம்.பி., மத்திய, மாநில அரசுகளிடம் தீப்பெட்டி உற்பத்தியாளர்களின் கோரிக்கைகள் கொண்டு செல்லப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும், என்றார்.

கூட்டத்தில், உதவி ஆட்சியர் (பயிற்சி) ஸ்ருதயஞ் ஜெய் நாராயணன், கோட்டாட்சியர் சங்கர நாராயணன், வட்டாட்சியர் அமுதா, நகராட்சி ஆணையாளர் கிருஷ்ணமூர்த்தி, தமிழ்நாடு தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் சங்க துணை தலைவர் டி.ராஜி. 

தென்னிந்திய தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் சங்க செயலாளர் வரதராஜன், நேஷனல் சிறு தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் சங்க தலைவர் எம்.பரமசிவம், செயலாளர் வி.எஸ்.சேதுரத்தினம், திமுக மாநில பொதுக்குழு உறுப்பினர் ஜெகன், ராதாகிருஷ்ணன், மாவட்ட பொறியாளர் அணி துணை அமைப்பாளர் ரமேஷ், நகர திமுக செயலாளர் கருணாநிதி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.