கறி கடை உரிமையாளரை தாக்கிய தலைமைக் காவலர் மற்றும் காவலர் சஸ்பெண்ட் - தூத்துக்குடி எஸ்பி அதிரடி நடவடிக்கை.!


தூத்துக்குடி அருகே கறி கடை உரிமையாளரை தாக்கிய தலைமைக் காவலர் மற்றும் காவலர் ஆகிய 2 பேரையும் தற்காலிக பணி நீக்கம் செய்து எஸ்பி ஜெயக்குமார் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம் காடல்குடி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியைச் சேர்ந்த சிவசுப்பிரமணியன் மகன் முத்துசெல்வன் (33) என்பவர் காடல்குடியில் கறிக்கடை வைத்து நடத்தி வருகிறார். இந்நிலையில் காடல்குடி காவல் நிலையத்தில் பணியாற்றி வரும் தலைமைக் காவலர் பாலகிருஷ்ணன் கடந்த 16.08.2021 அன்று இரவு கோழிக்கறி வேண்டும் என்று போனில் கேட்டுள்ளார், முத்துச்செல்வன் மறுநாள் காலையில்தான் தரமுடியும் என்று கூறியதால் அவர்களுக்குள் ஏற்பட்ட பிரச்சனையில், நேற்று (19.08.2021) தலைமைக் காவலர் பாலகிருஷ்ணன் (41) மற்றும் காவலர் சதீஷ்குமார் (28) ஆகிய 2 பேரும் கறிக்கடைக்குச் சென்று, அங்கிருந்த முத்துச்செல்வனை அவதூறாக பேசி தாக்கியுள்ளனர். 

தகவலறிந்து அங்கு வந்த தலைமைக் காவலர் பாலமுருகன் என்பவரின் காரில் ஏறி அங்கிருந்து திரும்பி சென்று விட்டனர். இச்சம்பவம் குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் , விளாத்திக்குளம் காவல் துணை கண்காணிப்பாளரை உடனடியாக விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டார். அதன்பேரில் விளாத்திக்குளம் காவல் துணை கண்காணிப்பாளர்  பிரகாஷ் மேற்பார்வையில் காடல்குடி காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டு கறிக்கடை உரிமையாளர் முத்துச்செல்வனை தாக்கிய காவல்துறையைச் சேர்ந்த பாலகிருஷண்ன், சதீஷ்குமார் மற்றும் அவர்களை அங்கிருந்து காரில் கூட்டி வந்த பாலமுருகன் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து, தலைமறைவாக உள்ள மேற்படி காவலர்களை போலீசார் தேடிவருகின்றனர்.

இதனையடுத்து தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் உடனடியாக நடவடிக்கை வேண்டும் என்று மேற்படி போலீசார் மீது வழக்குப்பதிவு செய்து தலைமைக் காவலர் பாலகிருஷ்ணன் மற்றும் காவலர் சதீஷ்குமார் ஆகிய இருவரையும் இன்று உடனடியாக தற்காலிக பணி நீக்கம் (Suspend) செய்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளார். மேலும் தலைமைக் காவலர் பாலமுருகனை உடனடியாக தூத்துக்குடி ஆயுதப்படைக்கு மாற்றம் செய்தும், மேற்படி 3 போலீசார் மீதும் துறை ரீதியாகவும் நடவடிக்கை எடுக்கவும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவிட்டுள்ளார்.