சாலை விபத்தில் காயமடைந்தவர்களை காப்பாற்றினால் பாராட்டுச் சான்றிதழ் - மாவட்ட ஆட்சியர் டாக்டர்.செந்தில்ராஜ் தகவல்.!


சாலை விபத்தில் பாதிக்கப்பட்டவர்களை பொன்னான நேரத்தில் அருகிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்து உதவி புரியும் நபர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் வெளியிட்டுள்ள  செய்திக்குறிப்பில்

தூத்துக்குடி மாவட்டத்தில், மோட்டார் வாகன சாலை விபத்துகளில் பாதிக்கப்பட்ட நபர்களை விபத்து ஏற்பட்ட ஒரு மணி நேரத்திற்குள் மருத்துவமனை சிகிச்சை மையத்திற்கு கொண்டு சென்று உயிரை காப்பாற்றும் கருணை உள்ளம் கொண்ட 

நபர்களுக்கு ( Good Samaritan) பாராட்டு சான்றிதழ் மற்றும் ரூ. 5 ஆயிரம் (ஒரு நிகழ்வுக்கு) வழங்கப்படும் என்ற புதிய திட்டத்தினை இந்திய அரசின் சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. 

இந்த திட்டம் 15.10.2021 முதல் 31.03.2026 வரை செயலில் இருக்கும். இத்திட்டத்தின் நோக்கம் விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடியாக உதவும் சிந்தனையை உருவாக்குவதற்கும், 

விபத்தில் உயிரை காப்பாற்றிய நபருக்கு நிதி உதவி (விருது) மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படும். ஒரு நபர் ஒரே விபத்தில் பல நபர்களின் உயிரை காப்பாற்றினால் ரூ.5 ஆயிரம் மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படும். பல நபர்கள் சேர்ந்து ஒரு நபரின் உயிரை காப்பாற்றினால் பாராட்டுச் சான்றிதழ் மற்றும் ரூ. 5 ஆயிரம் சமமாக பிரித்து அனைவருக்கும் வழங்கப்படும் 

பல நபர்கள் சேர்ந்து பல நபர்களின் உயிரை காப்பாற்றினால் விபத்து ஏற்பட்ட நபர் ஒருவருக்கு ரூ. 5 ஆயிரம் என்று கணக்கிடு செய்யப்பட்டு அதிகபட்சம் உயிரை காப்பாற்றிய தனிமனிதர் ஒருவருக்கு ரூபாய் 5000 மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படும். 

இந்த திட்டத்தில் தகுதியான நபர்களை தேர்ந்தெடுப்பதற்கு மாவட்ட ஆட்சியர் தலைமையில் காவல்துறை, மருத்துவத்துறை, வட்டார போக்குவரத்து அலுவலர் கொண்ட மாவட்ட பரிந்துரைக் குழு ஏற்படுத்தப்படும். 

இந்தக் குழுவானது சம்பந்தப்பட்ட காவல் நிலையம் & மருத்துவமனையின் பரிந்துரையின் பேரில் பெறப்படும் மனுக்கள் மீது மூன்று மாதங்களுக்கு ஒரு முறை கூடி முடிவு எடுக்கும் தகுதி வாய்ந்த நபர்களுக்கு சென்னை போக்குவரத்து ஆணையர் அலுவலகம் மூலம் சம்பந்தப்பட்ட நபரின் வங்கிக் கணக்கில் பணம் செலுத்தப்படும். 

மாவட்டம் தோறும் வரப்பெறும் தகுதி வாய்ந்த நபர்களிலிருந்து மாநில அளவிலான பரிந்துரை குழு சிறப்பான மூன்று நபர்கள் தேர்வு செய்யப்பட்டு தேசிய குழுவிற்கு அனுப்பப்படும் அவ்வாறு பெறப்படும் முன்மொழிவில் வருடம் 10 நபர்கள் 

தேசிய பரிந்துரை குழுவால் தேர்வு செய்யப்பட்டு தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு ரூபாய் ஒரு லட்சம், பாராட்டுச் சான்றிதழ் மற்றும் கோப்பை ஆகியவை தலைநகர் டெல்லியில் நடக்கும் தேசிய சாலை பாதுகாப்பு விழாவில் வழங்கப்படும் என மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் தெரிவித்துள்ளார்.

Previous Post Next Post