தாமதமாக விடுமுறை அறிவித்த மாவட்ட நிர்வாகம் :கொட்டும் மழையில் நனைந்தபடி வீடு திரும்பிய மாணவ, மாணவிகள்!! - .ஒமைக்ரான் பீதியால் பெற்றோர் அச்சம்


தூத்துக்குடி மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமறை அறிவிப்பத்தில் மாவட்ட நிர்வாகம் காலதமதமாக செயல்பட்டதால் மாணவர்கள் மழையில் நனைந்தபடி வீடு திரும்பியதாக பெற்றோர்கள் குற்றம் சாட்டி உள்ளனர்.


தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த அக்டோபர் மாதம் தொடங்கி பரவலாக பெய்து வருகிறது. இந்த நிலையில் வங்கக்கடலில் நிலைக்கொண்டிருந்த தாழ்வு மண்டலம் நேற்று புயலாக வலுப்பெற்றது. இதற்கு ‘ஜாவத்' என்று பெயரிடப்பட்டு இருக்கிறது. இது இன்று காலை வடக்கு ஆந்திரா-தெற்கு ஒடிசா கடலோர பகுதியை நெருங்கக்கூடும் என்றும் அதனைத்தொடர்ந்து வடக்கு-வடகிழக்கு திசையில் ஒடிசா கடற்கரையையொட்டி நகரும் என்றும் வானிலை ஆய்வு மையத்தால் தெரிவிக்கப்பட்டுள்ளது.



ஆனால் அதே நேரத்தில் தென் தமிழக பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக கன்னியாகுமரி, திருநெல்வேலி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழையும், ஏனைய தென் மாவட்டங்கள், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய உள்மாவட்டங்களில் அனேக இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும், வட கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் லேசான மழையும் இன்று பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.



இந்நிலையில் கனமழை காரணமாக மதுரை, விருதுநகர் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.


இதேபோல் நாமக்கல், தூத்துக்குடி மாவட்டத்தில் கனமழை பெய்து வருவதால் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.



வானிலை ஆய்வு மையம் சார்பில் தூத்துக்குடி மாவட்டத்திற்கு நேற்றே மழை எச்சரிக்கை விடுத்து இருந்தும்,  மாவட்ட நிர்வாகம் பள்ளிகளுக்கு விடுமுறை ஏதும் அறிவிக்கவில்லை.  இந்நிலையில் காலை 8 மணிக்கு பள்ளிக்கு சென்ற மாணவ, மாணவியர்கள் 8.40 மணிக்கு திடீரென விடுமுறை அறிவிப்பு வெளியிட்டது. இதனால் மாணவ, மாணவிகள் பலர்.மழையில் நனைந்தபடியே வீடுகளுக்கு திரும்பினர். பலர் வீடுகளுக்கு திரும்ப முடியாமலும், மாணவர்களை எப்படி வீட்டிற்கு அழைத்து வருவது என பெற்றோர்களும் மிகவும் கவலை அடைந்தனர். 



பொதுமக்கள் தற்போது ஒமைக்ரான் கொரோனா பீதியில் உள்ள நிலையில் மாணவர்கள் கொட்டும் மழையில் நனைந்து கொண்டே வீடு திரும்பியது பெற்றோர்களிடையே மிகுந்த அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

Previous Post Next Post