5 மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல்: தேதி அறிவிப்பு - உத்தரப்பிரதேசத்தில் 7 கட்டங்களாக வாக்குப்பதிவு.

தேசிய அளவில் மிகவும் எதிர்பார்க்கப்படும் உத்தரப்பிரதேச சட்டமன்ற தேர்தல் மொத்தம் 7 கட்டங்களாக நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

இந்தியாவில் உத்தரப்பிரதேம், பஞ்சாப், மணிப்பூர், கோவா, உத்ரகண்ட் ஆகிய மாநிலங்களில், சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. இதையடுத்து தலைமை தேர்தல் ஆணையர் சுஷில் சந்திரா, இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “உத்தரப்பிரதேசத்தில் 403 தொகுதிகளுக்கும், உத்ரகண்ட் மாநிலத்தில் 70 தொகுதிகளுக்கும், கோவாவில் 40, பஞ்சாப் மாநிலத்தில் 117, மணிப்பூரில் 60 தொகுகளுக்கும் தேர்தல் நடைபெற உள்ளது.

கொரோனா, ஒமைக்ரான் பரவும் நேரத்தில் தேர்தல் நடத்துவது சவாலானது. எனினும், கொரோனா பரவல் அதிகரிக்காத வகையில் தேர்தல் நடத்ததிட்டமிட்டுள்ளோம். கூடுதல் வழிகாட்டு நெறிமுறைகளை பயன்படுத்தி தேர்தல் நடத்தப்பட உள்ளது. இதில் உத்தரப்பிரதேச மாநிலத்தில் மட்டும் 7 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. மற்ற 3 மாநிலங்களில் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. மணிப்பூரில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது” என்று தெரிவித்துள்ளது.

கொரோனா கட்டுப்பாடுகள் நடைமுறையில் இருப்பதால் ஜனவரி 15-ம்தேதி வரையில் அரசியல் கட்சிகள் பொதுக்கூட்டம், பேரணி, வாகன பேரணி உள்ளிட்டவை நடத்துவதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

5 மாநிலங்களில் முதலில், பிப்ரவரி 10-ம்தேதி உத்தரப்பிரதேசத்தில் ஆரம்பிக்கும் வாக்குப்பதிவு கடைசியாக மார்ச் 7-ம்தேதி உத்தரப்பிரதேசத்திலேயே நிறைவு பெறுகிறது.

உத்தரப்பிரதேசத்தில் முதல்கட்ட வாக்குப்பதிவு பிப்ரவரி 10-ம்தேதி நடைபெறவுள்ள நிலையில் அதற்கான அறிவிக்கை ஜனவரி 14-ம்தேதி வெளியாகும். வேட்பு மனுத்தாக்கல் செய்ய கடைசி நாள் ஜனவரி 21. 24-ம்தேதி மனுக்கள் பரிசீலனை செய்யப்படும். 27-ம்தேதிக்குள் வேட்பு மனுக்களை திரும்பப் பெற்றுக் கொள்ளலாம்.

இதேபோன்று ஒவ்வொரு கட்டங்களுக்கும் தேர்தல் அறிவிப்புக்கு பின்னர் வேட்பு மனுத்தாக்கல் செய்ய 7 நாட்கள் அவகாசம் வழங்கப்படுகிறது. பரிசீலனைக்கு பின்னர் மனுக்களை திரும்பப் பெற 3 நாட்கள் அளிக்கப்படுகிறது.

உத்தரப்பிரதேசத்தில் 7 கட்டங்களாக வாக்குப்பதிவு முறையே, பிப்ரவரி 10, 14, 20, 23, 27, மார்ச் 3 மற்றும் மார்ச் 7 ஆகிய தினங்களில் நடைபெறவுள்ளது.

பாதுகாப்பு பணிகளை மேற்கொள்ள போதுமான அளவில் துணை ராணுவத்தினர் தயார் நிலையில் இருப்பதாக, இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுஷில் சந்திரா இன்று தெரிவித்துள்ளார். சட்டம் ஒழுங்கு பிரச்னை அதிகம் இருக்கும் பகுதிகளில் கூடுதல் துணை ராணுவத்தினர் நிறுத்தப்படவுள்ளனர்.

5 மாநில சட்டமன்ற தேர்தல் பணியில் ஈடுபடும் அதிகாரிகள், ஊழியர்கள் அனைவரும் முன் களப் பணியாளர்களாக கருதப்படுவார்கள் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. நாட்டில் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், திட்டமிட்டபடி பாதுகாப்பான முறையில், தேர்தலை நடத்த அனைத்து நடவடிக்கைகளையம் தேர்தல் ஆணையம் மேற்கொண்டுள்ளது.

உ.பி.,யில் 403 தொகுதிகள்(7 கட்டங்களாக தேர்தல்)

ஓட்டுப்பதிவு நடக்கும் நாட்கள் :

பிப்.,-10(வியாழன்),

பிப்.,-14( திங்கள்)

பிப்.,20(ஞாயிறு)

பிப்.,23(புதன்),

பிப்.,27(ஞாயிறு)

மார்ச் -03(வியாழன்)

மார்ச்-07(திங்கள்)

உத்தர்கண்டில் 70 தொகுதிகள்( ஒரே கட்ட தேர்தல் )ஓட்டுப்பதிவு: பிப்.,14(ஞாயிறு)

பஞ்சாபில் 117 தொகுதிகள் ( ஒரே கட்ட தேர்தல் )ஓட்டுப்பதிவு : பிப்.,14(ஞாயிறு)

மணிப்பூரில் 60 தொகுதிகள்(2 கட்டங்களாக தேர்தல்) ஓட்டுப்பதிவு : பிப்.,27(ஞாயிறு), மார்ச் 03( வியாழன்)

கோவாவில் 40 தொகுதிகள்( ஒரே கட்ட தேர்தல் )ஓட்டுப்பதிவு : பிப்.,14(ஞாயிறு)

அனைத்து மாநிலங்களிலும் பதிவான ஓட்டுகள் மார்ச் 10 ம் தேதி எண்ணப்படும். இவ்வாறு தலைமை தேர்தல் ஆணையர் கூறினார்.

Ahamed

Senior Journalist

Previous Post Next Post