பாகிஸ்தான்: ஹிந்து கோயிலை சேதப்படுத்திய வழக்கில் 22 பேருக்கு 5 ஆண்டுகள் சிறை - 9 மாதத்தில் நீதிமன்றம் தீர்ப்பு.!

பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள இந்துக் கோயிலை சேதப்படுத்திய குற்றத்திற்காக 22 பேருக்கு 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து மே 11 புதன்கிழமை பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத எதிர்ப்பு நீதிமன்றம் 9 மாதங்களில் வழக்கை விசாரித்து தீர்ப்பளித்தது.

ஆகஸ்ட் 4, 2021 அன்று நடந்த இந்தச் சம்பவம், ரஹீம் யார் கான் மாவட்டத்தில் உள்ள போங் நகரில் உள்ள விநாயகர் கோவிலுக்கு நூற்றுக்கணக்கான மக்கள் திரண்டு வந்து, அதன் கதவுகள், ஜன்னல்கள் மற்றும் சிலைகளை கம்புகள் மற்றும் கற்களால் சேதப்படுத்தியதைக் கண்டதாக Scroll.in தெரிவித்துள்ளது.

இந்த கோவில் லாகூரில் இருந்து சுமார் 590 கிமீ தொலைவில் அமைந்துள்ளது. காவல்துறையின் கூற்றுப்படி, கும்பல் கோஷங்களை எழுப்பியபடி சிலைகளை அழித்ததுடன் கோயிலின் ஒரு பகுதியையும் எரித்துள்ளது.

ஒன்பது வயது சிறுவன் மசூதி ஒன்றின் மீது (seminary) சிறுநீர் கழித்ததற்காக நாட்டின் நிந்தனைச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. பின்னர் அச்சிறுவனுக்கு உள்ளூர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியதைத் தொடர்ந்து இந்த நாசவேலை நடந்தது.

போலீசார் குறைந்தது 84 குற்றவாளிகளை அடையாளம் கண்டு கைது செய்தனர். அவர்களின் வழக்கு செப்டம்பர் 2021 இல் தொடங்கி 9 மாதங்களில் கடந்த வாரம் முடிந்தது. குற்றம் சாட்டப்பட்ட 84 பேரில், 62 பேரை சந்தேகத்தின் பலனைக் கொடுத்து விடுவித்த நீதிமன்றம், மீதமுள்ள 22 பேருக்கு 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்துள்ளது.

"புதன்கிழமை, ஏடிசி நீதிபதி (பஹ்வல்பூர்) நசீர் ஹுசைன் தீர்ப்பை அறிவித்தார். நீதிபதி 22 சந்தேக நபர்களுக்கு தலா 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து, மீதமுள்ள 62 பேரை விடுதலை செய்து, சந்தேகத்தின் பலனை அளித்தார்," என்று நீதிமன்ற அதிகாரி ஒருவர் செய்தி நிறுவனமான பிடிஐயிடம் தெரிவித்தார்.

சம்பவ இடத்தில் இருந்து காணொளிகள் மற்றும் சாட்சியங்களின் நிலைப்பாட்டின் அடிப்படையில் 22 பேரும் குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் மத்திய சிறையில் இருந்து நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டனர்.

கோவில் தாக்குதலை தொடர்ந்து, உச்ச நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில், குற்றம் சாட்டப்பட்டவர்களிடம் இருந்து, 4 லட்சம் ரூபாய் இழப்பீடாக அரசு வசூலித்து, கோவிலை புனரமைத்து மீட்டது. அப்போது பாகிஸ்தான் தலைமை நீதிபதியாக இருந்த குல்சார் அகமது கூறுகையில், “கோயிலில் நடந்த சேதம் பாகிஸ்தானுக்கு அவமானத்தை ஏற்படுத்தியுள்ளது.

"இந்து சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்கு இந்த அவமதிப்பு சம்பவம் என்ன மன வேதனையை ஏற்படுத்தியது என்பதை கற்பனை செய்து பாருங்கள்" என்று தலைமை நீதிபதி குறிப்பிட்டதாக பிடிஐ செய்தி வெளியிட்டுள்ளது.

இந்த நாசவேலையை கண்டித்து அந்நாட்டு நாடாளுமன்றமும் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றியது. கைபர் பக்துன்க்வாவில் சிறுபான்மையினர் விவகாரங்களுக்கான ஆணையம் அமைக்கவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.


Ahamed

Senior Journalist

Previous Post Next Post