போக்குவரத்து துறை சார்பில் வாகனங்களை ஆய்வு செய்ய, பராமரிக்க 7 நடமாடும் பணிமனைகள் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

 

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (31.12.2022) தலைமைச் செயலகத்தில், போக்குவரத்துத் துறை சார்பில் அரசு தானியங்கி பணிமனைகள் இல்லாத இடங்களில் அரசுத் துறை வாகனங்களை ஆய்வு செய்வதற்காகவும், பராமரிப்பதற்காகவும்  மதுரை, திண்டுக்கல், தருமபுரி, காஞ்சிபுரம், வேலூர், சேலம் மற்றும் திருநெல்வேலி ஆகிய 7 இடங்களில் ஒரு கோடியே 2 லட்சத்து 48 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள நடமாடும் பணிமனைகளை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

போக்குவரத்துத் துறையின் 2022 - 23ஆம் ஆண்டிற்கான மானியக் கோரிக்கையில், தமிழ்நாடு மோட்டார் வாகனப் பராமரிப்புத் துறையில் 20 பணிமனைகள் மட்டுமே பல்வேறு மாவட்ட தலைமையிடங்களில் செயல்பட்டு வருகின்றன. அரசு தானியங்கி பணிமனைகள் இல்லாத பிற மாவட்டங்களில் இயங்கி வரும் அரசுத் துறை வாகனங்களை பழுது நீக்கும் பொருட்டு அருகிலுள்ள அரசு தானியங்கி பணிமனைகளுக்கு அவை கொண்டு செல்லப்படுகின்றன.

இதற்காக அவ்வாகனங்கள் நீண்ட தொலைவு பயணிக்க வேண்டியுள்ளதால் கூடுதல் எரிபொருள் செலவு மற்றும் காலதாமதம் ஏற்படுகிறது. இதனை தவிர்க்கும் வகையில் நடமாடும் பணிமனைகள் (Mobile workshops) மதுரை, திண்டுக்கல், தருமபுரி, காஞ்சிபுரம், வேலூர், சேலம் மற்றும் திருநெல்வேலி ஆகிய ஏழு இடங்களில் அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

அதன்படி, அரசு தானியங்கி பணிமனைகள் இல்லாத கிருஷ்ணகிரி, தேனி, கரூர், திருவள்ளூர், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, இராணிப்பேட்டை, திருப்பத்தூர், நாமக்கல், தென்காசி ஆகிய மாவட்டங்கள் பயன்பெறும் வகையில் அம்மாவட்டங்களில் உள்ள அரசுத் துறை வாகனங்களை ஆய்வு செய்வதற்காகவும் பராமரிப்பதற்காகவும், மதுரை, திண்டுக்கல், தருமபுரி, காஞ்சிபுரம், வேலூர், சேலம் மற்றும் திருநெல்வேலி ஆகிய இடங்களில் ஒவ்வொரு வாகனமும் ரூ.14,34,214/- மதிப்பீட்டில் பெறப்பட்டு, ஒவ்வொரு வாகனத்திற்கும் ரூ.29,925/- மதிப்பீட்டில் பழுது நீக்கம் செய்யத் தேவையான கருவிகள் வழங்கப்பட்டது.

மொத்தம் 1 கோடியே 2 லட்சத்து 48 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள ஏழு அரசு நடமாடும் பணிமனைகளை தமிழ்நாடு முதலமைச்சர் இன்று கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு, உயர்கல்வித் துறை அமைச்சர் க.பொன்முடி, பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ. வேலு, போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர், தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு, போக்குவரத்துத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் கே.கோபால், தமிழ்நாடு மோட்டார் வாகனப் பராமரிப்புத் துறை இயக்குநர் கொ.செந்தில்வேல் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.


Ahamed

Senior Journalist

Previous Post Next Post