கரிசல் இலக்கியத்தின் தந்தை கி.ரா. மணி மண்டபம்; நாளை காணொளி காட்சி மூலம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார் - மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் ஆய்வு.!

கரிசல் இலக்கியத்தின் தந்தை,  சாகித்திய அகாதமி விருது பெற்ற  மறைந்த எழுத்தாளர் `கி.ரா’ என்று அழைக்கப்படும் கி.ராஜநாராயணன் நினைவாக தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் உள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் தமிழக அரசு சார்பில் ரூ.1கோடியே 50 லட்சம் மதிப்பில் மணிமண்டபம் அமைக்கப்பட்டுள்ளது. பணிகள் அனைத்தும் நிறைவடைந்த நிலையில் நாளை தமிழக முதல்வர் மு.க‌ஸ்டாலின் காணொளி காட்சி மூலம் சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து திறந்து வைக்கிறார். இந்நிலையில் விழா ஏற்பாடுகள் குறித்து தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் ஆய்வு மேற்கொண்டார்.

இதைத்தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் செய்தியாளர்களிடம் பேசுகையில் 

கோவில்பட்டியில் கரிசல் இலக்கியத்தின் தந்தை கி.ராஜநாராயணன் மணி மண்டபம் அமைக்க முதல்வர் உத்தரவிட்டு ரூ.1 கோடியே 50 லட்சம் மதிப்பில்  அமைக்கப்பட்டுள்ளது. மணி மண்டப வளாகத்தில் கி.ரா.  திருவுருவ சிலை நிறுவப்பட்டுள்ளது. இந்த பணிகள் அனைத்தும் முடிவடைந்து விட்டன.

மணிமண்டபத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொளி காட்சி மூலம் நாளை 2-ந்தேதி திறந்து வைக்கிறார். அதன் பின்னர் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வரும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் மணிமண்டபத்திற்கான பாதுகாப்பு குறித்த வசதிகள் அனைத்தும் செய்யப்படும். கி.ரா. பயன்படுத்திய பொருட்களை , அவரது குடும்பத்தினர் வழங்கி உள்ளனர். கனிமொழி எம்பி பாண்டிச்சேரியில் இருந்து அத்தனை பொருட்களையும் வரவழைத்துள்ளனர். அந்தப் பொருட்கள் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட உள்ளது. கி.ரா.எழுதிய அனைத்து புத்தகங்களும் நூலகத்தில் வைக்கப்படும். கரிசல் இலக்கிய எழுத்தாளர்கள் எழுதிய அனைத்து புத்தகங்களும் வைக்கப்படும், மற்றொரு அறையில் கி.ராவின் புத்தகங்கள் டிஜிட்டல் வடிவில் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட உள்ளது.  தூத்துக்குடியில் நடைபெற்றதை  போன்று கோவில்பட்டியிலும் புத்தக திருவிழா  நடத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்

ஆய்வின் போது கோட்டாட்சியர் மகாலட்சுமி, தாசில்தார் சுசிலா, பொதுப்பணித்துறை அதிகாரிகள் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் உடனிருந்தனர்.

Ahamed

Senior Journalist

Previous Post Next Post