'தமிழகத்தில் நடப்பது அடிமை அரசு அல்ல, ஸ்டாலின் அரசு' - காங்கிரஸ் ஆர்ப்பாட்டத்தில் கவர்னருக்கு எச்சரிக்கை!

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் அழகிரி உத்தரவு படி தமிழகம் முழுவதும் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவியை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  தூத்துக்குடியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மாநகர் மாவட்ட தலைவர் முரளிதரன் தலைமை வகித்தார். 

முரளிதரன் ஆற்றிய கண்டன உரையில்: மோடி அரசு பொறுப்பேற்று 9 ஆண்டுகள் நிறைவு பெறவுள்ளது. ஆனால் பாஜக மூன்று யுக்திகளை கடைபிடித்து ஆப்ரேஷன் மேளா, ஜனநாயக படுகொலை, மக்கள் விரோத செயல் என பலவற்றில் ஈடுபட்டு தேர்தல் நேரத்தில் வாக்காளர்களை வசைப்படுத்துவது, அதில் வெற்றி கிடைக்கவில்லையென்றால் தேர்தலில் வெற்றிப் பெற்றவர்களை எதிர்கட்சி உறுப்பினர்களை விலைபேசுவது, தனக்கு அடிபணியாத மாநிலத்தை  தமிழ்நாடு, மேற்குவங்காளம் உள்ளிட்ட பல மாநிலங்களை கவர்னர் மூலம் நெருக்கடியை கொடுப்பது, சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட 15க்கும் மேற்பட்ட தீர்மானங்களுக்கு ஒப்புதல் வழங்காமல் இழுத்தடிப்பது போன்ற மக்கள் விரோத செயல்களை தொடர்ந்து செய்து வருவது கண்டிக்கத்தக்கது. எந்தவிதமான மிரட்டலுக்கும் தமிழகம் அடிபணியாது என்றார். 

மாநில பொதுக்குழு உறுப்பினரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான சுடலையாண்டி பேசுகையில்: நாட்டுப்பற்று உள்ளவராக ஆர்.என்.ரவி இல்லை. ஆர்.எஸ்.எஸ். கொள்கை உள்ளவராக இருக்கிறார். சுதந்திரப்பற்றும் இல்லை. சுதந்திரத்தைப் பற்றி தெரியவும் இல்லை. தேசிய கீதம் இசைப்பதற்கு முன்பே எழுந்து சென்றுவிட்டார். தமிழகத்தில் ரம்மி விளையாட்டு மூலம் 34 பேர் இறந்துள்ளனர். இதற்கு தடை கேட்டு ஒப்பதலுக்கு அளித்த கோரிக்கையை நிறைவேற்றாமல் சூதாட்டக்காரர்களுடன் அமர்ந்து உரையாடுகிறார். நாகலாந்து மாநிலத்தில் பணியாற்றிய போது இவருக்கு எதிரான போராட்டத்தின் மூலம் விரட்டியடிக்கப்பட்டார். மோடியின் பினாமியாக செயல்படுவது கண்டிக்கத்தக்கது. 

மாநில துணைத்தலைவர் சண்முகம் பேசுகையில்: அரசின் கொள்கை, திட்டம், கோட்பாடு இதன் மரபுகளை முறையாக கடைபிடிக்க வேண்டும். இவை எல்லாவற்றையும்  மீறி கவர்னர் செயல்படுகிறார். அவர் செய்த செயல்பாடுகள் அனைத்தும் முறண்பாடானது. ஆனால் இதை இ.பி.எஸ். நியாயப்படுத்தி பேசுகிறார். முன்பு ஜெயலலிதா ஆட்சியில் கவர்னராக சென்னாரெட்டி இருந்த போது இந்த சட்டமன்றத்தில் அம்மா அரசு என்று தாங்கள் தயாரித்துக் கொடுத்த பட்ஜெட் அறிக்கையை சென்னா ரெட்டி இந்த அரசு என்று தான் படிப்பேன் என்று கூறி ஒப்புதல் பெற்று, பின்னர் தான் சட்டசபையில் பேசினார். இந்த வரலாற்றையெல்லாம் மறந்து விட்டீர்களா. நீக்கம், சேர்த்தல் இரண்டுக்கும் அரசிடம் ஒப்புதல் பெற வேண்டும். நாகரீகம் கருதி பேசுபவருக்கு துணை போகக் கூடாது. தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் கண்ணியத்தோடும், கடமை உணர்வோடும் பணியாற்றுகிறார். இது இ.பி.எஸ் - ஓ.பி.எஸ் அடிமை அரசு அல்ல. தன்மானமுள்ள தமிழர்களின் தலைவர் ஸ்டாலின் அரசு என்பதை புரிந்து கொள்ளுங்கள். விமர்சனம் வைக்கலாம், ஆனால் தவறு செய்தால் கவர்னருக்கு என்ன தண்டனையோ அதே தண்டனை தான் எல்லோருக்கும். சட்டம் என்பது வேறு. மரபு என்பது வேறு. 

இதையெல்லாம் தெரியாமல் கவர்னராக இருந்து கொண்டு தமிழிசை ஒரு பக்கம் பேசுகிறார். அந்த பதவியை உதறிவிட்டு அண்ணாமலையை போல் களத்திற்கு வாருங்கள் சந்திப்போம். அண்ணாமலையும் உளறிக்கொண்டு தான் திரிகிறார். ஜெயக்குமார் நாவடக்கத்துடன் பேச வேண்டும். தகுதியில்லாவர்கள் எல்லாம் தரங்கெட்டு பேசுகிறார்கள். தமிழ்நாடு அரசு தன்மான அரசு என்பதை எதிர்ப்பின் மூலம் உங்களுக்கு உணர்த்தப்பட்டுள்ளது, என்று பேசினார். பின்னர் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவியை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர். 

கண்டன ஆர்ப்பாட்டத்தில் மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் சந்திரபோஸ், ஐசன்சில்வா மண்டல தலைவர்கள் சேகர், செந்தூர்பாண்டி, மகிளா காங்கிரஸ் மாவட்ட தலைவி தனலெட்சுமி, சிறுபாண்மை பிரிவு தலைவர் மைதீன், மகிளா காங்கிரஸ் மண்டல தலைவி சாந்தி, அமைப்பு சாரா தொழிற்சங்க மாவட்ட தலைவர் நிர்மல் கிறிஸ்டோபர், விவசாய பிரிவு மாவட்ட தலைவர் பாலசுப்பிரமணியன், மாவட்ட துணை தலைவர்கள் ஏ.டி.பிரபாகரன், சின்னகாளை, ஜாண்சன், அருணாசலம், மாவட்ட பொது செயலாளர் மைக்கேல், மாவட்ட செயலாளர்கள் கோபால், நாராயணசாமி, அலெக்ஸ், முத்துராஜ், முன்னாள் நகர் மன்ற உறுப்பினர்கள் கந்தசாமி, வெங்கடசுப்பிரமணியன், ராதாகிருஷ்ணன், மனித உரிமைத்துறை மாவட்ட தலைவர் ஜெயராஜ், நிர்வாகி குமார முருகேசன், ஐ.என்.டி.சி.ராஜு, வடக்கு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் ராகுல், வார்டு தலைவர்கள் மைக்கேல் பிரபாகர், தனுஷ், மகாலிங்கம், முத்துராஜ், ஜூட்சன், ராஜரத்தினம், விஸ்வநாதன், முருகேசன், மேரி, வெள்ளைச்சாமி உள்பட காங்கிரஸ் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பலர் திரளாக கலந்து கொண்டனர்.

Ahamed

Senior Journalist

Previous Post Next Post