ஸ்ரீராமர் பிண்டம் கொடுத்த தலம்.. த்ரியகம்பேஸ்வரர் ஜோதிர்லிங்க கோவில்..!

 மேற்கு கடற்கரை காத்துல தட.. தடக்குற ரயில் பயணம்... காட்டு வழிப்பாதைல வர்ற மலைச்சுரங்கங்கள்ன்னு...  1500 கி.மீ., தூர பயணத்தை தாண்டினா வர்றது தான் த்ரியகம்பேஸ்வரர் ஜோதிர்லிங்க கோவில்...பிரம்மகிரி மலை அடிவாரத்துல நிக்குற தலம்... பிரம்மா, விஷ்ணுவோட, சிவபெருமானும் சேர்ந்து மும்மூர்த்திகளா அருள்பாலிக்குற அருமையான ஜோதிர்லிங்கத்தலம் தாங்க   த்ரியகம்பேஸ்வரர் ஜோதிர்லிங்க கோவில்..

12 ஜோதிர்லிங்க கோவில்கள்ல பிரம்மா, விஷ்ணு, சிவன் மூணு பேரும் ஒரே லிங்க வடிவமா அருள்பாலிக்குற அருமையான தலம் தாங்க  த்ரியகம்பேஸ்வரர். இந்த கோவில் மஹாராஷ்ட்ராவுல இருக்குற மேற்கு தொடர்ச்சி மலைல பிரம்மகிரி, நீலகிரி, அப்புறம் காலகிரின்னு சொல்ற மூணு மலைகளுக்கு நடுவுல இருக்குங்க... இந்த கோவில் போறது எப்படின்னு இதோட ஸ்பெஷாலிட்டி என்னன்னு தெரிஞ்சுக்குவோம். சிவபெருமான் ஆருத்ரா தரிசன நாள்ல ஜோதி வடிவமா 12 இடங்கள்ல அருள்பாலிச்சாரு.. அதை ஜோதிர்லிங்கம்னு சொல்றாங்க.. இந்த  த்ரியகம்பேஸ்வரர் ஜோதிர்லிங்கம் மத்த ஜோதிர்லிங்கம் மாதிரி இல்லாம பிரம்மா, விஷ்ணு, சிவன் மூணு பேரும் லிங்க வடிவமா அருள் தர்ற கோவிலா இருக்கு.

நம்ம ஊர்ல இருந்து, மஹாராஷ்ட்ரால இருக்குற நாசிக் போறதுக்கு, மும்பை போற டிரெயின்ல புக் பண்ணி போலாம்...  நெறய டிரெயின் வசதி இருக்குங்க... மும்பை கல்யாண், பான்வெல், மும்பை செண்ட்ரல்ன்னு ஏதாவது ஒரு ரயில்வே ஸ்டேஷனுக்கு டிக்கெட் போட்டு போனா போதும்... அங்க இருந்து நாசிக் ரோடு ரயில்வே ஸ்டேஷன் ஒரு நாலு மணி நேர டிராவல்ல போயிடலாம்.. இதுதவிர கோயம்பத்தூர்ல இருந்து மங்களூர் வழியா போற ட்ரெயின் எல்லாம் போகுது.. சுமாரா 28 மணி நேர பயணம் இருக்கும்... தென்மாவட்டத்துக்காரங்க கூடுதலா ஒரு 4 மணி நேரம் போக வேண்டி வரும்... நம்ம போனது கோயம்புத்தூர்ல இருந்து போனதால, கேரளா சொர்ணூர், கோழிக்கோடு, மங்களூர், உடுப்பி, கோவான்னு அரபிக்கடலோரம் அருமையான ரயில் பயணம்... கடலோரம்ன்னு கடல் தண்ணி.. அப்புறம் பேக் வாட்டர், நெறஞ்சு கெடக்குற தென்னை மரம்ன்னு செம்மையான ஜாலி டிராவல் தான்...

அதுவும் மங்களூரு தாண்டிப்போகும் போது மலைக்காடுகள்ல ரயில் போறது வேற லெவலா இருக்கும்.. ஆறு, மலைன்னு கிராஸ் பண்ணி போற ட்ரெயின் ரூட்... தட.. தடன்னு போலாம்.. வழில ஏகப்பட்ட டன்னல் எல்லாம் வருது... மலையோரம் போயிட்டுருக்கும்போது, கும்மிருட்டுக்குள்ள மலைச்சுரங்கங்கள்ல ரயில் போகுது... அப்படியே பயணம் முடிஞ்சு நாசிக் ரோடு ரயில்வே ஸ்டேஷன்ல இறங்கினோம்னா.. வெளில வந்தாலே ஏகப்பட்ட பஸ் இருக்கு...த்ரியகம்பேஸ்வரர் ஜோதிர்லிங்க கோவில் இருக்குற இடம் த்ரியம்பாக்னு சொல்றாங்க... நாசிக்ல இருந்து 28 கி.மீ., தூரத்துல இருக்கு... அதுவும் மலையத்தெடி பயணம் தான்... பஸ்சுக்கு 50 ரூபா ஆகும்.. மூணு நாலு பேர் போனா அங்கேயே ஷேர் ஆட்டோ எடுத்துக்கலாம்.. ஒரு ஆளுக்கு 150 ரூபா வாங்குறாங்க... 

ஒரு மணி நேரம் ஆட்டோ இல்லன்னா பஸ் பயணம் போனா த்ரியம்பாக் வருது... பிரம்மகிரி, நீலகிரி, காலகிரி மலையெல்லாம் பேக்ரவுண்ல ரசிச்சுக்கிட்டே போகலாம்.. இந்த பிரம்மகிரில தான் இந்தியாவோட ரெண்டாவது மிகப்பெரிய ஆறா இருக்குற கோதாவரி உற்பத்தியாகி வருது...

சரி, கோவில் பக்கத்துல வந்தாச்சு.. அப்படியே கோவில தாண்டி கொஞ்ச தூரம் நடந்து போனோம்னா குஷாவர்த தீர்த்தம் வருதுங்க...குஷாவர்த தீர்த்தம் தான் பாவம் தீர்க்குற தீர்த்தமா கருதப்படுது. ஸ்ரீராமரே இங்க வந்து இந்த தீர்த்தத்துல அவரோடபித்ருக்களுக்கு ஷ்ரத்தம் பண்ணிருக்கார்ன்னா பாருங்க.. அதுவுமில்லாம கவுதம முனிவரும் இங்க வந்து புனித நீராடி இருக்காராம்.. இதனால இந்த கோவில் பித்ரு தோஷம் தீர்க்குற தலமா கருதறாங்க...  இந்தியாவில நாலு கும்பமேளா நடக்குற இடங்கள்ல  நாசிக்ல இருக்குற இந்த தலம் கும்பமேளா நடக்குற தலமா இருக்கு.. இதனால இந்தியா முழுக்க இருந்து இங்க தீர்த்த யாத்திரை வர்றவங்க அதிகம்.. இத 1700 கள்ல நானா பட்னாவிஸ் காலத்துல இத புதுசா கட்டிருக்காங்க.. படித்துறை, தூண்கள், சிற்பங்கள், பரிவார தெய்வ கோவில்கள்ன்னு ராஜா காலத்த நியாபகப்படுத்துது...இந்த த்ரியம்பாக்ல அடுத்த கும்பமேளா 2027 வது வருஷம் நடக்கும்... 

இந்த குளத்து தண்ணிய ரிசைக்ளிங் பண்றாங்க.. நம்மளும் இறங்கி ஜாலியா குளிச்சுட்டு, பக்கத்துல இருக்குற சிவன் கோவில்ல சாமிய கும்பிட்டுட்டு, மெயின் கோவிலா இருக்குற த்ரியகம்பேஸ்வரர் கோவிலுக்கு நடந்து வந்தோம்.. கருப்பு கல்லுல பிரம்மாண்டமா கட்டிருக்காங்க.. த்ரியகம்பேஸ்வரர் கோவில் வளாகத்துக்குள்ள போனதுமே நமக்கு பலநூறு வருஷம் பின்னால போன ஃபீல் தருது... அச்சுல ஊத்தி செஞ்சு வச்ச மாதிரி கருப்புக்கல்லுல இருக்குற டிசைன்ஸ், சிற்பங்கள் எல்லாம் சூப்பரோ சூப்பர்... 

பல யுகங்கள் கடந்த த்ரியகம்பேஸ்வரர் கோவில 1700 கள்ல நானா பட்னாவிஸ் 9 லட்சம் ரூபா செலவு பண்ணி கட்டினாராம்.. 31 வருஷம் செதுக்கு செதுக்குன்னு மில்லி மீட்டர்.. மில்லி மீட்டரா செதுக்கிருக்காங்க... பார்த்தாலே பரவசம் தான்.. உள்ளே போய் கல் சுவர், தூண்கள் எல்லாம் தொட்டுப்பார்த்து, இமேஜினேஷன்ல ஒரு 300 வருஷம் பின்னாடி போய் ஃபீல் பண்ணிட்டு வரலாம்.. அவ்ளோ வொர்த்... நிச்சயமா இது ஒரு மாஸ்டர்பீஸ் கோவில்ங்க... 

வரிசையா நின்னு அமைதியா மும்மூர்த்திகள மனசுல நினைச்சு கும்பிட போலாம்... சாதாரண நாள்ல அரை மணி நேர்த்துல சாமி கும்பிட முடியுது... கோவில் வாசல்லயே ஸ்பெஷல் தர்ஷன் கவுண்டர் எல்லாம் இருக்குது.. உள்ளே போனோம்னா கர்ப்பகிரகத்துல ஆவுடை மட்டும் இருக்கும்..  மத்த லிங்கங்கள் மாதிரி இல்லாம ஆட்டுக்கல் மாதிரி இருக்குற ஆவுடை மட்டும் இருக்கு.. அதுக்குள்ள சின்னதா மூணு புள்ளிகள் வச்ச மாதிரி விரல் தொடுற அளவுக்கு மும்மூர்த்திகளும் இருக்காங்க.. இந்த லிங்கத்துல எந்த நேரமும் தண்ணீர் உற்பத்தியாகி த்ரியகம்பேஸ்வரருக்கு அபிஷேகம் ஆகிட்டே இருக்கு.. அவ்ளோ அருமையான தலம் இது.. மெயின் கர்ப்பகிரகத்துல யாரையும் அனுமதிக்கல.. வெளில நின்னு தரிசனம் பண்ணினோம்..

அதாவது சிவபெருமான் ஜோதி வடிவமா உயர்ந்து நின்னப்ப, அவரோட முடி காண விஷ்ணுவும், அடி, அதாவது பாதம் காண பிரம்மனும் போனாங்க இல்லையா? அது இந்த இடத்துல நடந்ததா சொல்றாங்க.. அதனால இங்க பிரம்மா, விஷ்ணு சிவன்னு மும்மூர்த்திகளும் அருள்பாலிக்குற தலமா இருக்குங்க.. சாமி தரிசனம் பண்ணிட்டு கோவில் பிரகாரத்த சுத்தி வந்தோம்னா அபிஷேக லிங்கம் வச்சுருக்காங்க... அதுல விரல் தொட்டு மும்மூர்த்திகளை வணங்கலாம். வில்வம், தீர்த்தம் எல்லாம் நாமளே அபிஷேகம் பண்ணிட்டு வரலாம்.. ரொம்ப பீஸ்ஃபுல்லா இருக்கு... 

வாய்ப்பு கிடைச்சா.... இல்ல.. இல்ல.. வாய்ப்ப உருவாக்கிட்டு ஒரு தடவ போயிட்டு வாங்க.. ரொம்ப அருமையான... ஆத்மார்த்தமான தரிசனம் கிடைக்கும்..

Previous Post Next Post