மதுரை மத்திய தொகுதியில் நடைபெறும் அரசு நிகழ்ச்சிகளுக்கு அழைப்பு இல்லை : பழனிவேல் தியாகராஜன் எம்.எல்.ஏ குற்றச்சாட்டு


மதுரை மத்திய தொகுதி சட்டமன்ற உறுப்பினரும்,மாநில திமுக தகவல் தொழில்நுட்ப அணிச்செயலாளருமான பழனிவேல் தியாகராஜன் விடுத்துள்ள அறிக்கையில், தமிழகத்தில் நிதி நிலையில் மோசமான செயல்பாடுகளை கொண்ட அரசாங்கம் நடைபெற்று கொண்டிருக்கிறது என்பதை ஏற்கனவே தலைமை  தணிக்கை குழு அம்பலப்படுத்தி இருக்கிறது. அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூட தமிழக  அரசு எட்ட வேண்டிய வருமானத்திற்கு 37 சதவிகிதம் வரவில்லை என்ற குறைபாடு தெளிவாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அதற்கும் மேல் இரண்டு,மூன்று ஆண்டுகளுக்கு மேலாக மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கிடாமல் நிறுத்தி வைத்திருந்தார்கள்.அதற்காக போராடிய மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தியதோடு அவர்கள் மீது கைது நடவடிக்கை எடுக்கிற மோசமான நிலையில் அரசின் செயல்பாடு உள்ளது.ஆனால் தற்போது இதனையெல்லாம் மீறி சில தவறுகளை திருத்திக்கொள்கிற வகையில் மடிக்கணினி தருவதாக சொல்கிறார்கள்.ஆனால் அரசு நிதியின் மூலம் வழங்கப்படுகிற இந்த திட்டம் அதிமுகவின் சொந்தப்பணத்தியிலேயோ,அமைச்சர்களின் பணத்தில் தரப்படுகின்ற தயவு கிடையாது. மாணவர்கள் உரிமையோடு பெறக்கூடிய அரசின் திட்டத்தில் விதி முறைகளின் படி எந்த தொகுதியில் இந்த திட்டம் நடத்தினாலும் அந்த தொகுதியின் சட்டமன்ற உறுப்பினருக்கு அழைப்பிதழ் கொடுத்து நிகழ்ச்சியை நடத்திட வேண்டும் .

ஆனால் எனது தொகுதியில் நடைபெற்ற மடிக்கணினி வழங்கிடும் நிகழ்ச்சியில் எனக்கு அழைப்பு விடுக்காமல் அமைச்சர் செல்லூர் ராஜு வை வைத்து நிகழ்ச்சியை நடத்தி இருக்கிறார்கள். அமைச்சர் செல்லூர் ராஜு அவர் தொகுதியில் செய்யக்கூடிய பணியை என் தொகுதியில் செய்கிறார்.  ஆனால் அதனை கூட நான் அதிகம் விமர்சிக்க விரும்பவில்லை. ஏனென்றால் அவர் துறையிலும் , தொகுதியிலும் நல்ல பெயரை பெற்றிடாதவர். நடைபெற்று முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் கூட  அமைச்சர் செல்லூர் ராஜுவின் தொகுதியான மதுரை மேற்கில் அதிமுக வேட்பாளர் வெறும் 55208 வாக்குகளை மட்டும் பெற்று 26814  வாக்குகள் வித்தியாசத்தில் (14 .64 சதவிகிதம்) தோல்வியை தழுவினார்.வைகை அணையை நீர் ஆவியாகாமல் தடுக்க அமைச்சர் மேற்கொண்ட பணி உலகம் முழுவதும்  பரவி தவறான  பெயரை பெற்றவர். ஆகவே அரசியல்வாதி என்பதால் அவர் பெயர் கிடைக்க வேண்டும் என்பதற்காக செய்யக்கூடிய பணிகளை நான் குறை கூற விரும்பவில்லை . இந்த நிகழ்ச்சியை முழுமையாக செயல்படுத்திய வேண்டிய கல்வித்துறை அதிகாரிகளில் முக்கியமானவர் மதுரை மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் சுவாமிநாதன். அவர் இது போன்ற விதி முறைகளை மீறி ஆளும்கட்சியின் அடிமை போல் செயல்படுவது வருந்தத்தக்கது. இதில் கண்டிக்கத்தக்க வேண்டிய மற்றொரு விஷயம் என்னவென்றால் ஏற்கனவே மாவட்ட முதன்மை கல்வி அலுவலராக இருக்க கூடிய சுவாமிநாதன் மீது பல்வேறு புகார்கள் பிரச்சனைகள் வந்து கொண்டே இருக்கின்றன. திடீரென மறைமுகமாக அவரது குடும்பத்தினர்  பள்ளி நடத்திக்கொண்டு இருக்கிற மாவட்டத்தில் மீண்டும் அவரை கல்வி அதிகாரியாக நியமிக்கப்பட்டதும், ஒரு நபரே அவர் குடும்பத்தினர்  நடத்துகின்ற பள்ளிக்கு கல்வி அதிகாரியாக வருவதற்கும் யாருக்கு எவ்வளவு கொடுத்து பணி இட மாறுதல் பெற்றார் என்ற சர்ச்சை பரவலாக இருந்து வருகிறது. இத்தகைய நெருக்கடிகளால் ஆளும் கட்சிக்கு ஆதரவாக செயல்படக்கூடிய சூழ்நிலையில் உள்ளார் . நான் பொது கணக்கு குழு உறுப்பினர் என்ற அடிப்படையில் தணிக்கை குழுவிற்கு கடிதம் எழுதிட உள்ளேன். இந்த வருடம் தணிக்கையை ஆய்வு செய்கிற போது குறிப்பாக மதுரை மாவட்ட கல்வித்துறையை கூடுதல் கவனம் செலுத்தி ஆய்வு செய்யுமாறு கடிதம் எழுத உள்ளேன். அதே போல் கல்வித்துறை அமைச்சருக்கும் ,கல்வித்துறை செயலாளருக்கும் இந்த விதிமுறைக்கு விரோதமான செயல்பாட்டை கூறி ஏற்கனவே முரண்பட்ட உள்நோக்கம் கொண்ட  மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி  தொடர்ந்து இதே மாவட்டத்தில் தொடர்ந்து பணியாற்றுவது சரியா,வேறு மாவட்டத்திற்கு மாற்றப்பட வேண்டியவரா என்ற கேள்வியை முன் வைக்கிறேன். எந்த ஆட்சியும் நிரந்தரமில்லை. என்றாவது ஒருநாள் உண்மை வெளிவரும், அன்று தவறு செய்கிறவர்கள் பதில் சொல்லக்கூடிய சூழல் வரும்  என இவ்வாறு  அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.