சக்தியில் தனியார் மருத்துவமனை மருத்துவர் அலட்சியத்தால் குழந்தை பலி


 


சத்தியமங்கலத்தை அடுத்த ராமபைலூரை சேர்ந்த கர்ப்பிணி காயத்திரிக்கு கடந்த ஞாயிற்றுக் கிழமை காலை சத்தியமங்கலத்தில் உள்ள சக்தி மருத்துவமனையில் அறுவை சிகிச்சை மூலம் ஆண் குழந்தை பிறந்தது. இரண்டு நாட்களாக நலமுடன் இருந்த குழந்தைக்கு இன்று காலை திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. குழந்தைக்கு சிகிச்சை அளிக்கக்கோரி உறவினர்கள் மருத்துவரை அணுகி உள்ளனர். ஆனால் குழந்தைக்கு சிகிச்சை அளிக்காமல் மருத்துவர்  கஸ்தூரி அலட்சியமாக பதில் சொல்லி விட்டு வெளியூர் சென்று விட்டதாக கூறப்படுகிறது. இன்று மதியம் வரை காத்திருந்து விட்டு குழந்தையின் உடல்நிலை மேலும் மோசமடைந்ததால்  அருகில் இருந்த வேறு மருத்துவரிடம் கொண்டு சென்ற போது குழந்தை மிகவும் ஆபத்தான கட்டத்தில் உள்ளது எனவும் உடனடியாக கோவை மருத்துவமனைக்கு கொண்டு செல்லுமாறு கூறியுள்ளார். உடனடியாக குழந்தையை கோவையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது  குழந்தை இறந்து விட்டதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். இதனால் ஆத்திரம் அடைந்த உறவினர்கள்  குழந்தையின் சடலத்தை சத்தியமங்கலத்தில் உள்ள மருத்துவமனைக்கு எடுத்து வந்து  முற்றுகையிட்டனர். 


இறந்த குழந்தையின் சடலத்தை மருத்துவரின்  மேஜை மேல் வைத்து கடும் வாக்கு வாதம் நடத்தினார்கள். மருத்துவர் கஸ்தூரியிடம் இனிமேல் மருத்துவமே பார்க்கக் கூடாது என கூக்கிரலிட்டனர். சத்திய மங்கலம் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.