வேலூர் அடுக்கம்பாறையை அடுத்துள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த 24 வயது இளம்பெண், வேலூரில் உள்ள பிரபல ஜவுளிக் கடையில் வேலை செய்கிறார். அதே கடையில் பணிபுரிந்துவரும் தன்னைவிட 4 வயது குறைவான காட்பாடியைச் சேர்ந்த இளைஞருடன் அந்தப் பெண்ணுக்குப் பழக்கம் ஏற்பட்டது. இருவரும் காதலித்துவந்தனர்.

 

 

கடந்த சனிக்கிழமை இரவு 9.30 மணியளவில், பணியை முடித்துவிட்டு இரண்டு பேரும் வேலூர் கோட்டை பூங்காவுக்குச் சென்றனர். ஆள் நடமாட்டம் இல்லாத மறைவான பகுதியில் தனிமையில் இருந்தபோது, கஞ்சா போதையில் 3 பேர் கொண்ட கும்பல் அங்கு வந்தனர். கழுத்தில் கத்தியை வைத்து இளம்பெண்ணின் தங்கக் கம்மலைப் பறித்துக்கொண்டனர். உள்ளூர் வைரல் முதல் உலக டிரெண்ட் வரை உடனடியாக உங்கள் மெயிலில்!

 

அதையடுத்து, காதலனைத் தாக்கி கத்தி முனையில் மரத்தடியில் அமரவைத்தனர். இளம்பெண்ணிடம் 3 பேரும் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டனர். அப்போது, இளம்பெண்ணையும் கடுமையாகத் தாக்கிவிட்டு அந்தக் கொடூர கும்பல் தப்பியது. பாதிக்கப்பட்ட பெண்ணை வீட்டருகே அழைத்துச் சென்றுவிட்ட காதலன் தன் வீட்டுக்குத் திரும்பினார். ரத்தக் காயங்களுடன் வந்த மகளைப் பார்த்ததும் பெற்றோர் பதறிப் போயினர்.

 

தனக்கு நேர்ந்த கொடுமையை அந்தப் பெண் கூறிக் கதறி அழுதார். அதிர்ச்சியடைந்த பெற்றோர், மகளை மீட்டு அடுக்கம்பாறையில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்னர், வேலூர் வடக்குக் காவல் நிலையத்துக்குச் சென்று புகார் அளித்தனர். இன்ஸ்பெக்டர் நாகராஜன் அன்றிரவே மருத்துவமனைக்குச் சென்று இளம்பெண்ணிடம் நடந்த சம்பவம் குறித்து விளக்கமாகக் கேட்டறிந்தார்.

காதலனையும் காவல் நிலையம் வரவழைத்து தீவிரமாக விசாரணை மேற்கொண்டார். காதலன் கொடுத்த அங்க அடையாளங்களை வைத்து குற்றவாளிகளைப் பிடிக்கும் பணியில் போலீஸார் முடுக்கிவிடப்பட்டனர். அத்துடன், சம்பவப் பகுதிக்குக் காதலனை அழைத்துச் சென்று விசாரித்தனர். இந்தநிலையில், நேற்று மதியம், கோட்டை சுற்றுச் சாலையில் சந்தேகப்படும்படி சுற்றித்திரிந்த இளைஞரை போலீஸார் பிடித்து விசாரித்தனர்.

 

அதில், பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட ஒருவர் அவர் எனத்தெரியவந்தது. மற்ற இரண்டு பேரும் நேற்றிரவு பிடிபட்டனர். கோட்டை அருகே உள்ள கஸ்பா வசந்தபுரத்தைச் சேர்ந்த மணிகண்டன் (41), அஜீத் (19), சக்திநாதன் (18) என்றும் இவர்கள் பல்வேறு வழிப்பறிக் கொள்ளைச் சம்பவங்களில் தொடர்ந்து ஈடுபட்டுள்ளதும் தெரியவந்தது. 3 பேரையும் கைதுசெய்த போலீஸார், தங்கள் பாணியில் தொடர்ந்து விசாரணை நடத்திவருகிறார்கள்.