திருப்பூரில் இந்திய தேசம் காத்த இஸ்லாமியர்கள் நினைவு பொதுக்கூட்டம்!!


திருப்பூரில் இந்திய தேசம் காத்த இஸ்லாமியர்கள் நினைவு பொதுக்கூட்டம் நடைபெற்றது.

 


 

பாஜக அரசு பெரு முதலாளிகளுக்கு ஆதரவாக கொண்டுவரும் சட்டங்களை தட்டிக்கேட்க தமிழக ஆட்சியாளர்களுக்கு துணிச்சல் இல்லை என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் சாடினார். திருப்பூரில் மஸ்ஜித் ஹஜ்ரத் பிலால் அஹ்லுஸ் சுன்னத் ஜமாத் சார்பில் குடியரசு தின விழாவை முன்னிட்டு, இந்திய தேசம் காத்த இஸ்லாமியர்கள் நினைவு பொதுக் கூட்டம் வெங்கடேஸ்வரா நகர் பகுதியில் நடைபெற்றது. திருப்பூர் பிலால் மஸ்ஜித் தலைமை இமாம் ஜபருல்லா பாகவி, பிலால் மஸ்ஜித் தலைவர் ஜாக்கீர் அஹமத் ஆகியோர்  தாங்கினார்கள். தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன், கோவை குனியமுத்தூர் தலைமை இமாம் அப்துல் மாலிக் சிராஜி, மேலப்பாளையம் முகம்மது உசைன், ஆயக்குடி பாரூக் ஆகியோர்  கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்கள்.

 

மோதினார் நவ்சாத் கிராஅத் வாசித்தார். துணிவும் முஹம்மது ஷரிப் தொகுப்புரை ஆற்றினார். பிலால் மஸ்ஜித் செயலாளர் உதுமான் முன்னிலை வகித்தார்.

 இந்தக் கூட்டத்தில் தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன்  பேசுகையில், இந்த நாட்டின் சுதந்திரத்துக்காக பாடுபட்டவர்கள் இஸ்லாமியர்கள் என்று தெரிவித்தார். பெரு முதலாளிகளுக்கு ஆதரவாக பாஜக அரசு கொண்டு வந்துள்ள சட்டங்களை தட்டி கேட்க தமிழக ஆட்சியாளர்களுக்கு துணிச்சல் இல்லை என்று அவர் கூறினார். ஜிஎஸ்டி, நீட் போன்றவற்றை கொண்டு வந்து தமிழகத்தை சூறை காடாக மாற்றி கொண்டு இருப்பதாகவும் அவர் கூறினார்.

 

இந்த நாட்டை வளர்ச்சிப் பாதைக்குக் கொண்டு செல்வதாக சூளுரைத்து ஆட்சிக்கு வந்த நரேந்திர மோடி நாட்டைப் பாழாக்கி இருப்பதாக அவர் குற்றம் சாட்டினார். இஸ்லாமியர்களின் சுதந்திரப் போராட்ட வீர வரலாறு தெரியாமல், இந்த தேசத்தை பாழாக்குடுவதாக அவர் மேலும் கூறினார். மேலும் அவர் பாஜக கட்சிக்கு ஆதரவு அளித்து வரும் துணை முதல்வர் பன்னீர்செல்வத்தை சாடினார். இந்தக் கூட்டத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் உள்பட பலர் பங்கேற்றனர்.