இலங்கை தமிழர்களுக்கு குடியுரிமை கிடைக்குமா??? நிர்மலா சீதாராமன் பதில்

 


சென்னை தியாகராய நகரில் உள்ள கிருஷ்ண கான சபாவில் சென்னை சிட்டிசன் பாரம் மற்றும் நியு இந்தியா பாரம் அமைப்பு சார்பில் நடைபெற்ற “குடியுரிமை திருத்த சட்டம் 2019” குறித்த விவாதத்தில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கலந்து கொண்டு உரையாற்றினார்


அப்போது பேசிய அவர், முந்தைய குடியுரிமை சட்டத்தில் எந்த மாற்றத்தையும் குடியுரிமை திருத்த சட்டம் மூலம் அரசு மேற்கொள்ளவில்லை என்றும், புதிதாக சில அம்சங்கள் மட்டுமே அரசால் சேர்க்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் குடியுரிமை திருத்த சட்டம் நிறைவேற்றப்பட்ட நிலையில், அதை அமல்படுத்துவது மாநிலங்களின் கடமை என்று குறிப்பிட்ட நிர்மலா சீதாராமன் , குடியுரிமை திருத்த சட்டத்தை செயல்படுத்த மாட்டோம் என மாநிலங்கள் தெரிவிப்பது சட்டத்துக்கு புறம்பானது எனவும் கூறினார். இதையடுத்து நிகழ்ச்சியில் கலந்து கொண்டோர் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்த அவர், அண்டை நாடுகளை சேர்ந்த அகதிகளுக்கு குடியுரிமை அளிக்கவே குடியுரிமை திருத்த சட்டம் கொண்டு வரப்பட்டிருப்பதாகவும், அதற்காக அகதிகளாக இருக்கும் இலங்கை தமிழர்களுக்கு குடியுரிமை அளிக்கப்பட மாட்டாது என்று அர்த்தம் கிடையாது என்றும் கூறினார்.  இந்தியாவில் இலங்கை தமிழர்கள் 95 ஆயிரம் பேர் முகாமில் அகதிகளாக இருப்பதாகவும், அவர்களுக்கு குடியுரிமை அளிக்க வழிவகை செய்யப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.