பொதுத்தேர்வு ரத்து: சுட்டிக்குழந்தைகள் மகிழ்ச்சி!

தமிழகத்தில் ஐந்தாம் வகுப்பு மற்றும் எட்டாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டதை அடுத்து பொதுமக்கள், சின்னஞ்சிறு மாணவர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.


தமிழகத்தில் 5,8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொது தேர்வு நடத்தப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்திருந்தது. இதனால் தமிழகத்தில் ஐந்தாம் வகுப்பு மற்றும் எட்டாம் வகுப்பு பள்ளி குழந்தைகளின் பெற்றோர்கள்,  ஆசிரியர்கள் என அனைவருக்கும் பணிச்சுமை அதிகம் ஆனது. ஐந்தாம் வகுப்பிலேயே அதிக மார்க் எடுக்க வேண்டும் என்கிற போட்டி உருவாக்கப்பட்டு விட்டதால், பெரும்பாலான பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை செலவு செய்து டியூசன் உங்களுக்கு அனுப்பி வைத்தனர். மேலும் ஐந்தாம் வகுப்பு மற்றும் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி என பல்வேறு வழிகாட்டி புத்தகங்கள் பயிலரங்குகள் என ஏற்பாடு செய்து மிக அதிக அளவில் சுமையை ஏற்படுத்தினர். இது தமிழகத்தில் பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவர்களிடத்தில் அதிருப்தியை ஏற்படுத்தியது. கல்வியாளர்களும் எதிர்ப்பு தெரிவித்தனர். எனவே தமிழக அரசு ஐந்தாம் வகுப்பு மற்றும் எட்டாம் வகுப்பு பொதுத் தேர்வை ரத்து செய்து உத்தரவிட்டது. இதனால் திருப்பூரில் பெற்றோர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.
திருப்பூர் கே.எஸ்.சி., பள்ளியில் 8 ஆம் வகுப்பு படிக்கும் மாணவன் இர்பான் என்பவன் கூறுகையில், பொது தேர்வை காரணம் காட்டி, வீட்டில் விளையாட விடாமல், படிக்க சொல்லி வற்புறுத்தினார்கள். இன்று பொது தேர்வு இல்லை என அறிவித்துள்ளது இனி விளையாட விடுவார்கள் என்று சந்தோசமாக இருக்கிறது என்றார்.
திருப்பூர் அவினாசியை சேர்ந்த 5 ஆம் வகுப்பு மாணவி ஜெயஸ்ரீ கூறுகையில், ' பப்ளிக் எக்சாம் என்று பயமாக இருந்தது. பள்ளி முடிந்ததும் மாலை 4 மணி முதல் டியூசன் சென்றேன். இரவு 8 மணி வரை டியூசன் செல்ல சொன்னார்கள். பப்ளிக் எக்ஸாம் இல்லை என்று கூறியதால் அம்மா இன்று முதலே டியூசன் வேண்டாம் என கூறி விட்டார். சந்தோசமாக இருக்கிறது. இனி தினமும் தங்கையுடன் விளையாடுவேன் என்றார்.
திருப்பூர் குமார் நகரை சேர்ந்த ஜெகதீஷ் என்பவர் கூறியது, ' படிப்பு என்றால் என்னவென்று தெரியாத வயதில் பொது தேர்வு அறிவித்தார்கள்.  இதற்காக பள்ளிகளில் நிறைய பயிற்சிகள் வைத்தார்கள். நிறைய கையேடுகள் வாங்க பணம் செலவானது. பள்ளி குழந்தைகளும் சிறைப்பட்டதுப்போல இருந்தார்கள். இனி அனைவருக்கும் மகிழ்ச்சி தான் என்றார்.
மொத்தத்தில் பொது தேர்வு ரத்து செய்யப்பட்டது அனைத்துத் தரபினரையும் மகிழ்ச்சி அடைய வைத்துள்ளது.


Previous Post Next Post