பழனியில் கோலாகலம்: இன்று தைப்பூசதேரோட்டம் - லட்சக்கணக்கானோர் குவிந்தனர்

 
தைப்பூச திருவிழா முன்னிட்டு ஆறுபடை வீடுகளில் இன்று தைப்பூச தேரோட்டம் நடைபெறுகிறது.


முருக பெருமானின் ஆறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான பழனியில், கடந்த 2-ம் தேதி தைப்பூசத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. நேற்று மாலை திருக்கல்யாணமும், வெள்ளித் தேரோட்டமும் நடைபெற்றது. தைப்பூசத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான தைப்பூசத் தேரோட்டம் இன்று மாலை நான்கு ரத வீதிகளில் நடைபெற உள்ளது.


 இதனையடுத்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் பாத யாத்திரையாக பழனிக்கு வந்த வண்ணம் உள்ளனர்.  அதே போல் ஆறுபடை வீடுகளில் முதல் படைவீடாக கருதப்படும் திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய ஸ்வாமி திருக்கோயிலில் தைப்பூசத் திருவிழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. 


தைப்பூச திருவிழா முன்னிட்டு உற்சவர் சண்முகர், தெய்வானைக்கு சிறப்பு அபிஷேகங்கள், அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடைபெற்றது. தைப்பூச விழாவையொட்டி ஏராளாமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். 


அறுபடை வீடுகளில் இரண்டாம் படைவீடான திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயிலுக்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் பாதயாத்திரையாக வந்து கடலில் புனித நீராடி சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். மேலும், தமிழகம் முழுவதும் உள்ள முக்கிய முருகன் கோவில்களில் பக்தர்கள், அலகு குத்தியும், காவடி சுமந்தும், பறவைக்காவடி எடுத்தும் தங்களது வேண்டுதல்களை நிறைவேற நேர்த்திக்கடன் செலுத்தி வருகின்றனர். லட்சக்கணக்கான மக்கள் திரண்டுள்ளதால் பழனி விழாக்கோலம் பூண்டு உள்ளது. தைப்பூச திருநாள் கூட்டத்தால் வியாபாரிகளும் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர். 


Previous Post Next Post