சம்படி பகுதியில் கொலை செய்யப்பட்ட பெண்ணின் குடும்பத்திற்கு ரூ.70,000 நிதியுதவி - குழந்தைகளின் படிப்பு செலவை ஏற்பதாக மாவட்ட எஸ்.பி ஜெயக்குமார் தகவல்

சம்படி பகுதியில் கொலை செய்யப்பட்ட பெண்ணின் குடும்பத்திற்கு ரூ.70,000 நிதியுதவி - குழந்தைகளின் படிப்பு செலவை ஏற்பதாக மாவட்ட எஸ்.பி ஜெயக்குமார் தகவல்

 


 

தூத்துக்குடி மாவட்டம், ஏரல் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சம்படி பகுதியில் கொலை செய்யப்பட்ட பெண்ணின் குழந்தைகளுக்கு தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பளர் எஸ்.ஜெயக்குமார் இன்று நிதியுதவி வழங்கினார்.

 

தூத்துக்குடி மாவட்டம், ஏரல் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சம்படி பகுதியைச்  சேர்ந்த கணேசன் என்பவரது மனைவி செங்கமலம் (47) என்பவர் கடந்த 12.09.2020 அன்று கொலை செய்யப்பட்டார். இது குறித்து ஏரல் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். 

 

இவ்வழக்கில் குற்றவாளிகளை விரைந்து கண்டுபிடித்து கைது செய்ய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தனிப்படைகள் அமைத்து உத்தரவிட்டார். அதன்படி தனிப்படையினர் சம்மந்தப்பட்ட 2 குற்றவாளிகளை கண்டுபிடித்து 12 மணி நேரத்தில் விரைந்து கைது செய்தனர்.

 

கொலை செய்யப்பட்ட செங்கமலத்தின் கணவர் 10 ஆண்டுகளுக்கு முன் இறந்துவிட்டார். செங்கமலத்திற்கு 2 பெண் குழந்தைகள் மற்றும் ஒரு ஆண் குழந்தை உள்ளனர். இவர்கள் தற்போது மேற்படி குழந்தைகள், அவர்களது பெரியம்மா அஷ்டலெட்சுமி அவர்களின் பராமரிப்பில் இருந்து வருகின்றனர். 

 

அந்த குழந்தைகளுக்கு ஏதாவது நிதியுதவி செய்ய வேண்டும் என்ற மனிதாபிமான அடிப்படையில் தூத்துக்குடி மாவட்ட காவல்துறை சார்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார்  பணம் ரூபாய். 70,000/- ம் வழங்கினார். 

 

மேலும் குழந்தைகள் மூவரின் படிப்புச் செலவையும் ஏற்பதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

 

இந்த நிதியுதவி வழங்கும் நிகழ்வின்போது தூத்துக்குடி காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் செல்வன் மற்றும் ஸ்ரீவைகுண்டம் காவல் துணை கண்காணிப்பாளர்  வெங்கடேசன் ஆகியோர் உடனிருந்தனர்.