தாம்பரம், ஆவடி புதிய காவல் ஆணையர் அலுவலகம்.!: முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.!


சென்னை: மக்கள்தொகை அடிப்படையிலும், நிர்வாக வசதிகளுக்காகவும், தாம்பரம், ஆவடி பகுதிகளில் அமைக்கப்பட்ட புதிய காவல் ஆணையரக அலுவலகங்களை முதல்வர் ஸ்டாலின் நேற்று காணொலிக் காட்சி வாயிலாகத் திறந்து வைத்தார்.

இதுகுறித்து தமிழக அரசு நேற்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "காவல்துறை என்பது, குற்றங்களைத் தடுக்கும் துறையாகவும், தண்டனை பெற்றுத்தரும் துறையாகவும் மட்டும் அல்லாமல், குற்றங்கள் நடக்காத சூழ்நிலையை உருவாக்கும் துறையாகச் செயல்பட வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தலின்படி மாநிலத்தின், அமைதியைப் பேணிப் பாதுகாத்து, சட்டம் ஒழுங்கைப் பராமரிக்கும் முக்கியப் பணிகளை ஆற்றி வரும் காவல்துறையின் பணிகள் சிறக்கப் பல்வேறு திட்டங்களைத் தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வருகிறது.

இதன் ஒரு பகுதியாக, முதல்வர் ஸ்டாலின் 13.09.2021 அன்று சட்டப்பேரவையில், காவல்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்திற்கு பதிலளித்து ஆற்றிய உரையில், “மாறி வரும் குற்றங்கள், மக்களின் பாதுகாப்புச் சூழல்கள் ஆகியவற்றை மனதில் கொண்டு, சென்னை பெருநகரக் காவல் துறையை மற்ற பெருநகரங்களில் உள்ளதுபோல் சீரமைத்திட இந்த அரசு எண்ணியுள்ளது. அந்த அடிப்படையில், தாம்பரம் மற்றும் ஆவடி ஆகிய இடங்களைத் தலைமையிடமாகக் கொண்டு தனித் தனி புதிய காவல் ஆணையரகங்கள் அமைக்கப்படும்” என்று அறிவித்தார்.

அதன்படி, சோழிங்கநல்லூரில் அமைக்கப்பட்டுள்ள தாம்பரம் காவல் ஆணையரகம் மற்றும் ஆவடி சிறப்புக் காவல்படை 2ஆம் அணி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள ஆவடி காவல் ஆணையரகம் ஆகியவற்றை முதல்வர் இன்று (1.1.2022) தலைமைச் செயலகத்தில், காணொலிக் காட்சி வாயிலாகத் தொடங்கி வைத்தார்.

தாம்பரம் காவல் ஆணையரகம், தாம்பரம் மற்றும் பள்ளிக்கரணை ஆகிய இரண்டு காவல் மாவட்டங்களுடன் 20 காவல் நிலையங்களை உள்ளடக்கிச் செயல்படும். நிர்வாக வசதிக்காக காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள சோமங்கலம் மற்றும் மணிமங்கலம் காவல் நிலையங்கள், செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள ஓட்டேரி, கூடுவாஞ்சேரி, மறைமலை நகர், தாழம்பூர் மற்றும் கேளம்பாக்கம் காவல் நிலையங்கள் தாம்பரம் காவல் ஆணையரக எல்லையில் இணைக்கப்பட்டுள்ளன.

ஆவடி காவல் ஆணையரகம், ஆவடி மற்றும் செங்குன்றம் ஆகிய இரண்டு காவல் மாவட்டங்களுடன் 25 காவல் நிலையங்களை உள்ளடக்கிச் செயல்படும். நிர்வாக வசதிக்காக திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள வெள்ளவேடு, செவ்வாப்பேட்டை, சோழவரம், மீஞ்சூர் மற்றும் காட்டூர் காவல் நிலையங்கள் ஆவடி காவல் ஆணையரக எல்லையில் இணைக்கப்பட்டுள்ளன. தாம்பரம் மற்றும் ஆவடி காவல் ஆணையரகங்கள் புதிதாக அமைக்கப்படுவதன் மூலம் சென்னை புறநகர்ப் பகுதிகளில் குற்றங்களைத் தடுப்பதற்கும், போக்குவரத்தைச் சீர்படுத்துவதற்கும், சட்டம் - ஒழுங்கு தொடர்பான மக்களின் குறைகளை உடனுக்குடன் நிவர்த்தி செய்யவும் வழிவகை ஏற்படும்.

இந்த நிகழ்ச்சியில், நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ.வேலு, இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு, தலைமைச் செயலாளர் முனைவர் இறையன்பு மற்றும் பல காவல் உயர் அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர்” என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.


Ahamed

Senior Journalist

Previous Post Next Post