வணிக வளாகங்களில் பார்க்கிங் கட்டணம் வசூலிக்க உரிமையில்லை - கேரள உயர் நீதிமன்றம் தீர்ப்பு

பார்க்கிங் கட்டணம் வசூலிக்க மால்களுக்கு உரிமை இல்லை  என்று கூறிய கேரள உயர்நீதிமன்றம், எர்ணாகுளத்தில் உள்ள லுலு இன்டர்நேஷனல் ஷாப்பிங் மாலுக்கு ஏதாவது உரிமம் வழங்கியுள்ளதா என்று களமசேரி நகராட்சியிடம் கேட்டுள்ளது.

நீதிபதி பி.வி.குன்ஹிகிருஷ்ணன், வணிக வளாகம் வாடிக்கையாளர்களிடமிருந்து சட்டவிரோதமாக பார்க்கிங் கட்டணத்தை வசூலிக்கிறது என்ற மனு மீதான விசாரனையின் போது மேற்படி தீர்ப்பை வழங்கினார்.

"கட்டட விதிகளின்படி, கட்டடம் கட்டுவதற்கு, வாகனம் நிறுத்த போதிய இடம் அவசியம். கட்டடத்தின் ஒரு பகுதி வாகனம் நிறுத்தும் இடம். பார்க்கிங் இடம் இருக்க வேண்டும் என்ற நிபந்தனையுடன் கட்டட அனுமதி வழங்கப்படுகிறது. இதன் அடிப்படையில் கட்டடம் கட்டப்படுகிறது. கட்டிடம் கட்டிய பிறகு, கட்டிடத்தின் உரிமையாளர் பார்க்கிங் கட்டணத்தை வசூலிக்க முடியுமா என்பது கேள்வி. முதல் பார்வையில் அது சாத்தியமில்லை என்று கருதுகிறேன்" என்று நீதிபதி தனது உத்தரவில் கூறியுள்ளார்.

இந்த விவகாரம் தொடர்பான தனது நிலைப்பாடு குறித்து அறிக்கை தாக்கல் செய்யுமாறு நகராட்சியிடம் கூறிய நீதிமன்றம், வழக்கை ஜனவரி 28-ம் தேதிக்கு ஒத்திவைத்தது.

Ahamed

Senior Journalist

Previous Post Next Post