லாக் டவுன் வருது... ஊருக்கு போறோம்... திருப்பூர் ரயில் நிலையத்தில் டிக்கெட் வாங்க குவியும் வடமாநில தொழிலாளர்கள்!

ஊரடங்கு பயம் காரணமாக, வடமாநிலங்களுக்கு செல்ல தொழிலாளர்கள் குவிவதால், திருப்பூர் ரயில் நிலைய முன்பதிவு மையம் நிரம்பி வழிகிறது. கூடுதல் முன்பதிவு டிக்கெட் கவுண்டர் அமைக்க வேண்டுமெனவும், வடமாநிலங்களுக்கு கூடுதல் ரயில்கள் இயக்க வேண்டுமெனவும் மணிக்கணக்கில் காத்திருக்கும் தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 


பனியன் தொழில் காரணமாக திருப்பூர் நகருக்கு வேலைவாய்ப்பு தேடி தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமானவர்கள் வருகின்றனர். இது தவிர வட மாநிலங்களான பீகார், ஒடிசா, ஜார்க்கண்ட், உ.பி., அசாம், உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து சுமார் 4 லட்சத்துக்கும் மேற்ப்பட்ட வடமாநில தொழிலாளர்கள் இங்கு வந்து வேலை செய்கிறார்கள். 

இவர்கள் மாதக்கணக்கில் தங்கி வேலை செய்து விட்டு ஆண்டுக்கு ஒரு முறை அல்லது இருமுறை மட்டும் சொந்த ஊர்களுக்கு செல்வார்கள்.  இந்த நிலையில் கடந்த சில நாட்களாகதமிழ்நாட்டில் கொரோனா தொற்றுப் பரவல் அதிகரித்து உள்ளது. ஞாயிறு ஊரடங்கு மற்றும் இரவு ஊரடங்கு அறிவிக்கப்பட்டு உள்ளதால், மீண்டும் ஊரடங்கு வந்து விடுமோ என்ற அச்சத்தில் சொந்த ஊருக்கு செல்லும் தொழிலாளர்கள் ரயில்நிலையங்களில் குவிந்து வருகிறார்கள். திருப்பூர் ரயில் நிலையத்தில் இதனால் கூட்டம் பிதுங்கி வழிகிறது. முன்பதிவு மையத்துக்கு வெளியேயும் வடமாநில தொழிலாளர்கள் வரிசையில் நிற்கின்றனர். 

அதிகாலை டிக்கெட் முன்பதிவு செய்ய வந்தவர்கள் இன்று மதியம் வரை டிக்கெட் முன்பதிவு செய்ய காத்திருக்க வேண்டி இருக்கிறது. சமூக இடைவெளி உள்ளிட்ட கொரோனா கட்டுப்பாடுகளை பின்பற்றாமல் வடமாநில தொழிலாலர்கள் டிக்கெட் பெற காத்திருக்கிறார்கள். திருப்பூர் ரயில் நிலையத்தில் டிக்கெட் முன்பதிவுக்கு கூடுதல் கவுண்டர் அமைக்க வேண்டும். மேலும்  ரயில்களில் வெயிட்டிங் லிஸ்ட் எண்ணிக்கை அதிகமாக உள்ளதால் கூடுதல் ரயில்களை இயக்க வேண்டும் எனவும் வடமாநில தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 
Previous Post Next Post