அலகுமலை முருகன் கோவில் கும்பாபிஷேக விழா

திருப்பூர் அலகுமலை முருகன் கோவிலில் முழு ஊரடங்கு நாளான இன்று காலை கும்பாபிஷேகம் நடைபெற்றது.

திருப்பூர் மாவட்டத்தில், பொங்கலூர் அருகே அலகுமலை உள்ளது. சிறிய குன்று மலையான இந்த மலையில்  ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேல் பழமையான முத்துக்குமார பால தண்டாயுதபாணி கோவில் உள்ளது. இந்த கோவில் திருப்பூர் மக்களிடையே பிரசித்தி பெற்ற கோவில் ஆகும்.

இந்த நிலையில் இந்த கோவில் சிறப்பாக புதுப்பிக்கப்பட்டு, கும்பாபிஷேகம் நடத்திட முடிவு செய்யப்பட்டது. அதன் அடிப்படையில் ஜனவரி 23 ஆம் தேதி கும்பாபிஷேகம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. அதற்கான ஏற்பாடுகளும் தீவிரமாக நடைபெற்றன. 

இந்த நிலையில், கும்பாபிஷேகம் நடைபெறும் ஞாயிறு கிழமையான இன்று கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. ஆனாலும், கும்பாபிஷேகத்தை நிறுத்தாமல் நடத்திட கோவில் நிர்வாகம் முடிவு செய்தது.

 அதனடிப்படையில் பொது மக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டு கோவில் கமிட்டியினர், அர்ச்சகர்கள் மற்றும் முக்கியஸ்தர்கள் மட்டும் பங்கேற்கும் வண்ணம் இன்று காலை கும்பாபிஷேகம் நடைபெற்றது.

கும்பாபிஷேகத்தை திருப்பரங்குன்றம் ராஜா பட்டர் தலைமையிலான அர்ச்சகர்கள் நடத்தி வைத்தனர். அவர்கள் கோபுர கலசங்களுக்கு புனித நீர் ஊற்றினர். தொடர்ந்து மகா தீபாராதனை மற்றும் அலங்கார பூஜைகள் நடைபெற்றது.


-கொங்கு ராமகிருஷ்ணன்


Previous Post Next Post