பல்லடம் ஊராட்சி ஒன்றியம் கரைப்புதூர் ஊராட்சியில் குளம், குட்டைகள் சீரமைக்கும் பணி துவக்கம்


திருப்பூர் மாவட்டம், பல்லடம் ஊராட்சி ஒன்றியம் கரைப்புதூர் ஊராட்சியில் குளம், குட்டைகள் சீரமைக்கும் பணியினை பல்லடம் சட்டமன்ற உறுப்பினர் கரைப்புதூர் ஏ.நடராஜன் முன்னலையில் மாவட்ட ஆட்சித்தலைவர் கே.எஸ்.பழனிசாமி துவக்கி வைத்தார். மேலும் அவர் பேசுகையில் :-
தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இயற்கை வளங்களை பாதுகாக்கும் வகையில் பல்வேறு வகையான சிறப்புத்திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறார். அந்த வகையில் தமிழகத்தில் நீர் ஆதாரங்களை செம்மைப்படுத்தி, விவசாயிகள் பயன்பெறும் வகையில் குடிமராமத்துப் பணிகள் 2019-20 ஆம் ஆண்டிற்கு தமிழ்நாடு முழுவதும் 1829 பணிகள் ரூ.499.68 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குறிப்பாக நமது மாவட்டத்தில்  134 பணிகள் ரூ.15.00 கோடியில் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இத்திட்டத்தில், கால்வாயில் வளர்ந்துள்ள செடிகொடிகள் முட்புதர்களை அகற்றுதல், கால்வாயினை தூர்வாரி சுத்தம் செய்தல். கால்வாயில் சேதமடைந்துள்ள குறுக்கு கட்டங்களை பழுது பார்த்தல், பழுதடைந்த மடைகளை சீரமைத்தல், பழுதடைந்த ஷட்டர்களை புதுப்பித்தல், கால்வாய் கரைகளை பலப்படுத்துதல். குளங்களின் கரைகளை பலப்படுத்துதல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மேலும், தமிழ்நாடு முதலமைச்சர் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் சார்பில் கிராமங்கள் தோறும் உள்ள ஏரிகள், குட்டைகள் மற்றும் ஊருணிகள் போன்ற நீர்நிலைகளின் கொள்ளவினை அதிகப்படுத்தவும் மழை நீரினை முழுமையாக சேமிக்கும் வகையில் கடந்த 07.08.2019 அன்று திருவள்ளூர் மாவட்டம் பனப்பாக்கம் ஏரியினை சீரமைக்கும் பணியினை தொடங்கி வைத்தார். இதனைத் தொடர்ந்து நமது மாவட்டத்திலுள்ள 13 ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட 824 குளங்கள் முதற்கட்டமாக தூர்வாரும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மேலும்,  பல்லடம் ஊராட்சி ஒன்றியம், கரைப்புதூர் கிராம ஊராட்சிக்குட்பட்ட சுமார் 16.00 ஏக்கர் பரப்பளவில் உள்ள இரண்டு குட்டைகளை பொதுமக்களின் 100 சதவீத பங்களிப்புடன் (எவரிடே ஸ்பின்னிங் மில்ஸ், கரைப்புதூர் சார்பில்) குடிமராமத்துப்பணிகள் மேற்கொள்வது சிறப்புக் குரியதாகும். இதே போன்று பிற குட்டைகள் மற்றும் ஏரிகளை தூர்வாரி மழை நீரினை முழுமையாக சேமிக்கும் வகையில் தன்னார்வலர்கள் மற்றும் பொது மக்கள் இப்பணிகளை மேற்கொள்ள மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் வரவேற்கப்படுகின்றனர். நமது அடுத்த தலைமுறையினர் ஆரோக்கியமாக வாழ்வதற்கு நாம் அனைவரும் ஒன்றுபட்டு நீர்நிலைகளை பாதுகாத்து, மரக்கன்றுகளை நட்டு வைத்து பராமரிப்பதுடன்  பிளாஸ்டிக் பயன்பாட்டினை முழுமையாக தவிர்க்க வேண்டுமென தெரிவித்தார்.
      இந்நிகழ்வின் போது  , பல்லடம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பாலமுருகன், பானுப்பிரியா, உதவி செயற்பொறியாளர் வெள்ளயங்கிரி, உதவி பொறியாளர் கற்பகம், பல்லடம் வட்டாட்சியர் சாந்தி, கரைப்புதூர் ஊராட்சி செயலாளர் காந்தி ராஜ், அரசு அலுவலர்கள், கூட்டுறவு சங்க தலைவர்கள் மற்றும் முன்னாள் உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள், தன்னார்வலர்கள், விவசாயிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


Previous Post Next Post