ஆக்ஸ்போர்டு பள்ளி 18வது ஆண்டு விழா - ஓய்வு பெற்ற ஐகோர்ட் நீதிபதி ராஜேஷ்வரன் பங்கேற்பு

மாணவர்களுக்கு பெற்றோர் வழிகாட்டியாகவும், ஆசிரியர்கள் சிறந்த வழிகாட்டியாகவும் திகழ்கின்றனர் என தென்காசி குத்துக்கல்வலசை ஆக்ஸ்போர்டு கல்வி குழும பள்ளியில்; நடைபெற்ற விழாவில் ஓய்வு பெற்ற ஐகோர்ட் நீதிபதி ராஜேஷ்வரன் பேசினார்.தென்காசி குத்துக்கல்வலசை ஆக்ஸ்போர்டு கல்வி குழுமத்தைச் சேர்ந்த ஆக்ஸ்போர்டு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மற்றும் ஆக்ஸ்போர்டு பப்ளிக் (சிபிஎஸ்சி) பள்ளியில் 18வது ஆண்டு விழா நடைபெற்றது. விழாவிற்கு ஓய்வு பெற்ற சென்னை ஐகோர்ட் நீதிபதி ராஜேஷ்வரன் தலைமை தாங்கினார். ஆக்ஸ்போர்டு கல்வி அறக்கட்டளை சட்ட ஆலோசகரும் சென்னை ஐகோர்ட் மதுரை கிளை வழக்கறிருமான திருமலை, பள்ளி தாளாளரும் முதல்வருமான அன்பரசி திருமலை, தலைமையாசிரியை குழந்தை தெரசா, உதவி தலைமையாசிரியை சுப்பம்மாள், நிர்வாக அலுவலர் கணேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆசிரியை வசந்தி வரவேற்றார். ஆசிரியர் சிவக்குமரன் சிறப்பு விருந்தினரை அறிமுகம் செய்தனார். நீதிபதி ராஜேஷ்வரன் கல்வி, விளையாட்டில் சிறந்து விளங்கும் மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கி பேசியதாவது:
மாணவ, மாணவிகள் பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களை மறக்கக் கூடாது. மாணவ, மாணவிகளுக்கு கல்வியுடன், ஒழுக்கத்தையும் கற்றுக் கொடுக்க வேண்டும். எப்படி ஒருவன் வளர்கிறான் என்பதனை  கல்வி அறிவுடன் ஒழுக்கமும் நிர்ணயிக்கிறது. இன்றைய சிக்கலான சமுதாய அமைப்பில் ஒழுக்கம் மிகவும் அவசியம்.புலிக்கு அஞ்சிய மனிதன் மரத்தின் மீது ஏறினார். மரத்தில் ஏற்கனவே குரங்கு ஒன்று தனது குட்டியுடன் இருந்தது. கீழே நின்ற புலி குரங்கை பார்த்து அந்த மனிதனை கீழே தள்ளி விடு. நான் அவனை சாப்பிட்டு விடுகிறேன். உன்னையும் உன் குட்டியையும் விட்டுவிடுகிறேன் என்றது. அதற்கு குரங்கு என்னை சரணாகதி அடைந்தவர்களை காப்பாற்றுவது எனது கடமையாகும். ஆகவே நான் மனிதனை கீழே தள்ளிவிட மாட்டேன் என்று கூறியது. இதன் பின்னர் குரங்கு தனது குட்டியை மனிதனிடம் கொடுத்து விட்டு மரத்தில் கிடந்த பழங்களை பறித்துக் கொண்டிருந்தது. அப்போது புலி மனிதனைப் பார்த்து நீ வைத்திருக்கும் குரங்கு குட்டியை கீழே போட்டு விடு. நான் அதனை சாப்பிட்டு விட்டு உன்னை விட்டு விடுகிறேன் என்றது. உடனே மனிதன் குரங்கு குட்டியை கீழே போட்டுவிட்டான். புலி குரங்கு குட்டியை சாப்பிட்டு விட்டது. பழங்கள் பறித்துக் கொண்டு வந்த குரங்கு தனது குட்டியை புலிக்கு மனிதன் இரையாக்கியதை கண்டு வருந்தியது. அப்போது புலி பார்த்தாயா குரங்கே நீ நம்பி மனிதனிடம் உன் குட்டியை ஒப்படைத்தாய். ஆனால் அந்த மனிதனோ நான் கேட்டதும் உனது குட்டியை கீழே போட்டு விட்டு அவன் உயிர் தப்பிவிடலாம் என எண்ணியுள்ளான். இப்போதாவது அந்த மனிதனை கீழே தள்ளி விடு என கூறியுள்ளது. அதற்கு குரங்கு நான் மனிதன் அல்ல என்றது. இதனால் ஏமாற்றத்துடன் புலி திரும்பிச் சென்றது. இதனை கண்ட மனிதன் வெட்கி தலைகுனிந்தான். 


சமுதாயத்தில் நாம் சாதிக்க வேண்டும். இதற்கு பணம், பதவி தடையல்ல. மாணவ, மாணவிகளுக்கு பெற்றோர் வழிகாட்டியாகவும், ஆசிரியர்கள் சிறந்த வழிகாட்டியாகவும் திகழ்கின்றனர். சந்தர்ப்பங்கள் இருப்பதை பயன்படுத்திக் கொண்டு முன்னேற வேண்டும். கஷ்டப்படாமல் எதுவும் கிடைக்காது. கஷ்டப்படாமல் கிடைக்கும் எதுவும் நிலைத்து நிற்காது. எனவே மாணவ, மாணவிகள் கஷ்டப்பட்டு படித்து வாழ்க்கையில் முன்னேற வேண்டும். இவ்வாறு நீதிபதி ராஜேஷ்வரன் பேசினார். விழாவில் சென்னை ஐகோர்ட் ஓய்வு பெற்ற பதிவாளர் நீதிபதி உதயன், ஓய்வு பெற்ற நீதிபதிகள் மீனாட்சி சுந்தரம், பாண்டுரங்கன், சட்டத்துறை பேராசிரியர் முகமது, சென்னை ஐகோர்ட் மதுரை கிளை வழக்கறிஞர்  அருள்வடிவு (எ) சேகர், பேராசிரியை அனார்கலி, தமிழ்நாடு நர்சரி மற்றும் பிரைமரி பள்ளிகளின் கூட்டமைப்பு தலைவர் பாலசுப்பிரமணியன், நெல்லை மாவட்ட நீதிமன்ற வழக்கறிஞர் ராமசாமி ஆகியோர் வாழ்த்தி பேசினர். விழாவில் மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிகளை மாணவர்கள் ருத்ரேஷ் வசந்த், முகமது மீரான்ஷமி ஆகியோர் தொகுத்து வழங்கினர். முடிவில் ஆக்ஸ்போர்டு கல்வி அறக்கட்டளை இயக்குநர் மிராக்ளின் பால் சுசி நன்றி கூறினார்.