ஓடை ஆக்கிரமிப்பாளர்களுக்கு துணைபோகும் அரசு அதிகாரிகளை கண்டித்து கோட்டாட்சியர் அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டம்

ஓடை ஆக்கிரமிப்பாளர்களுக்கு துணைபோகும் அரசு அதிகாரிகளை கண்டித்து கோட்டாட்சியர் அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டம்

 


 

கோவில்பட்டி நீர்வரத்து ஓடை ஆக்கிரமிப்பாளர்களுக்கு துணைபோகும் அரசு அதிகாரிகளை கண்டித்து 5-ம் தூண் அமைப்பினர் கோட்டாட்சியர் அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். கோவில்பட்டி கோட்டாட்சியர் அலுவலகத்தில் 5-ம் தூண் அமைப்பு நிறுவனர் சங்கரலிங்கம் தலைமையில், நீர்வரத்து ஓடை மீட்பு குழு செயலாளர் தமிழரசன், ஐ.என்.டி.யு.சி மாவட்ட பொது செயலாளர் ராஜசேகர், பூலித்தேவர் மக்கள் நல இயக்க நிறுவனர் செல்வம், ரத்ததான கழக ஒருங்கிணைப்பாளர் காளிதாஸ் உள்ளிட்டோர், ஓடை ஆக்கிரமிப்பாளர்களுக்கு துணைபோகும் அரசு அதிகாரிகளை கண்டித்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் அவர்கள் கோட்டாட்சியர் விஜயாவிடம் வழங்கிய மனுவில், கோவில்பட்டி நீர்வரத்து ஓடையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற சென்னை உயர் நீதி மன்ற மதுரை கிளை கடந்த 2010-ல் உத்தரவிட்டது. வருவாய்த்துறை மற்றும் நகராட்சி நிர்வாகம் இதை யார் அகற்றுவது என்ற  பிரச்சினையில் கோர்ட் உத்தரவை அமல்படுத்த காலம் கடத்தப்பட்டு வந்தது. தமிழ்நாடு தகவல் ஆணையர் உத்தரவின் பேரில் தமிழ்நாடு வருவாய் துறை நிர்வாகமும், தமிழ்நாடு நகராட்சி நிர்வாகமும் உரிய முறையில் விவாதித்து, நீர்வரத்து ஓடை ஆக்கிரமிப்புகளை வருவாய்த்துறை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். நகராட்சி நிர்வாகம் உரிய உதவிகளை செய்யவேண்டும் என வருவாய்த்துறை மூலம் உத்தரவிட்டது. 

 

இதன்படி 01.04.2018 முதல் மேற்படி நீர்வரத்து ஓடையில் உள்ள ஆக்கிரமிப்பு கட்டடங்களுக்குரிய அனைத்து வரி விதிப்புகளும் நகராட்சியால் ரத்து செய்யப்பட்டது. அதன்பின் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி, நகராட்சி அலுவலர்கள் மற்றும் தொழிலாளர்களுடன் நடந்தது. ஆக்கிரமிப்புகளை அகற்ற ஏதுவாக மின்வாரியத்தால்  ஆக்கிரமிப்பு கட்டடங்களில் உள்ள மின் இணைப்புகள்  துண்டிக்கப்பட்டன. இதற்கிடையே ஆக்கிரமிப்பாளர்கள் சென்னை உயர்நீதி மன்ற மதுரை கிளையில் தீபாவளி வரை தங்களுக்கு அனுமதி வேண்டும் என்று முறையீடு செய்ததின் பேரில்,  "இருந்தது இருந்தபடி"  என்ற உத்தரவை கோர்ட் பிறப்பித்தது. அதன்படி  ஆக்கிரமிப்பாளர்கள் வேறு எவ்வித முன் முயற்சியும் செய்யக்கூடாது என்பது தெரிய வந்தது. ஆனால் மேற்படி ஆக்கிரமிப்பாளர்கள் தங்கள் ஆக்கிரமிப்புகளை விரிவுபடுத்தி வியாபாரம் செய்கின்றனர். வருவாய் துறை அதிகாரிகளோ, காவல்துறையோ மேற்படி உயர் நீதிமன்ற உத்தரவை அவமதித்தவர்கள் மீது  எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.  இந்நிலையில், கோவில்பட்டி மின் துறை அதிகாரிகளும்  துண்டிக்கப்பட்ட மின் இணைப்புகளை மீண்டும் ஆக்கிரமிப்பாளர்களுக்கு இணைப்பு கொடுத்து வருகின்றனர். இது உயர்நீதி மன்றத்தை அவமதிக்கும் செயலாகும், எனதெரிவித்திருந்தனர்.

 

இதையடுத்து, கோட்டாட்சியர் விஜயா தலைமையில், மின் உதவி செயற்பொறியாளர் (பொறுப்பு) செந்தில்குமார், உதவி மின்பொறியாளர் (பொறுப்பு வேர்ட்பிரஸ்) மாரீஸ்வரன் ஆகியோர் முன்னிலையில், போராட்ட குழுவினர் கலந்து கொண்ட பேச்சுவார்த்தை நடந்தது.  இதில், மின் கட்டணம் கட்டாத கடைகளுக்கு மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. அபராதம் தொகையுடன் மின் கட்டணம் கட்டிய பின்பு இணைப்பு வழங்கப்பட்டது. மின் இணைப்பு முற்றிலுமாக துண்டிக்கப்பட்டு, மின் மீட்டர்களை அகற்றிய கடைகளுக்கு இணைப்பு கொடுக்கப்படவில்லை. மேலும், ஏதாவது முறைகேடுகள் நடந்திருந்தால் எழுத்து பூர்வமான புகாருக்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர். தொடர்ந்து பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து போராட்ட குழுவினர் கலைந்து சென்றனர்.