நாட்டுப்புறக்கலைஞர்களுக்கு வாரியத்தின் சார்பில் நல உதவிகள்

நாட்டுப்புறக்கலைஞர்களுக்கு வாரியத்தின் சார்பில் நல உதவிகள்  கூடுதலாக்கப்பட்டு வழங்கப்படுகிறது.சேலத்தில் மார்கழி இசை விழாவினைத் தொடங்கி வைத்து கலை பண்பாட்டுத்துறை இயக்குநர் வ.கலைஅரசி தகவல்.மார்கழி மாதம் என்பது புனிதமான மாதமாக போற்றப்படுகிறது. சென்னையில் நடைபெறும் மார்கழி இசை விழா உலக புகழ் பெற்றது. தலைநகர் சென்னையைத் தவிர பிற இடங்களில் மார்கழி இசை விழாகள் நடத்திடும் வகையில் கலை பண்பாட்டுத்துறையின் ஏழு மண்டலங்களிலும் மார்கழி இசை விழா நடத்த  தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது. சேலம்  மண்டல அளவிலான மார்கழி இசை விழா  தளவாய்பட்டியில் உள்ள அரசு கலை பண்பாட்டு வளாகத்தில் நடைபெற்றது.  இவ்விழாவில் திருவாரூர் எஸ்.கிரிஷ்  புதுக்கோட்டை அம்பிகா பிரசாத்,  வயலின் கலைமாமணி திருவாரூர் பக்தவத்சலம் குழுவினரின் இசை நிகழ்ச்சியுடன் தொடங்கியது. தொடர்ந்து  முனைவர் பெங்களூர்  ரேகாராஜி குழுவினரின் மோகினியாட்டம் , மெய்ஞானம் ராமநாதன் குழுவினரின் நாதஸ்வர இசை நிகழ்ச்சி  கலைமாமணி கொங்கம்பட்டு முருகையன் சிறப்பு தவில் ஆகிய நிகழ்ச்சிகள்   நடைபெற்றது .இவ்விழாவிற்கு கலை பண்பாட்டுத்துறை இயக்குநர் வ.கலையரசி  தலைமைவகித்தார். கலை பண்பாட்டுத்துறை இணை இயக்குநர் முனைவர் ச.சூர்ய பிரகாஷ் முன்னிலை வகித்தார்.  வ.கலையரசி தலைமையுரையில்  இசை மனிதனின்  உள்ளத்திற்கு  அமைதியையும்,  இன்பத்தையும்,  மூளைக்கு  சுறுசுறுப்பையும் அளிக்கிறது. குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல்,பாலை என ஒவ்வொரு நிலத்திற்கும் தனித்துவமான ஓர் இசையும், இசைக்கருவிகளும் இருந்தைத் தொல்காப்பியம் சான்றுரைக்கிறது. சிலப்பதிகாரம்  நூற்றுக்கும் மேற்பட்ட பண்களைக் குறிப்பிடுகிறது. இவ்வாறு சிறப்பு மிகுந்த நமது பாரம்பரிய இசையினை தமிழகத்தின் பல பகுதிகளிலும் அதன் தொன்மை மாறாமல் கொண்டு செல்லும் பணியினை கலை பண்பாட்டுத்துறை மேற்கொண்டு வருகிறது.  கிராமிய கலைகளை மேம்படுத்தும் வகையில்  அமைக்கப்பட்ட  தமிழ்நாடு நாட்டுப்புறக்கலைஞர்கள் நலவாரியத்தின் மூலம் அளிக்கப்படும்  நலஉதவிகள்  கூடுதலாக்கப்பட்ட நிதியுதவிகளுடன் வழங்கப்படுவதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.நாட்டுப்புறக்கலைஞர்கள் வாரியத்தின் உறுப்பினர்களுக்கு ஏற்கனவே வழங்கப்பட்டு வந்த கண் கண்ணாடி வாங்கிட நிதி உதவி அவர்களின் மகன்/மகள் திருமண நிதியுதவி, இயற்கை மரணம் அடையும் உறுப்பினரின் குடும்பத்திற்கு நிதியுதவி ஆகியவற்றுடன்   தமிழ்நாடு நாட்டுப்புறக் கலைஞர்கள் சமூக பாதுகாப்பு மற்றும் நலத் திட்டம் மேம்படுத்தப்பட்டு 10 வகுப்பு முதல் முதுகலை பட்டப்படிப்பு வரை பயிலும் உறுப்பினரின் மகன்/மகள்   கல்வி உதவித்தொகை ரூ 1000 முதல் ரூ 8000, வரை வழங்கவும், கண் கண்ணாடி, இயற்கை மரணத்திற்கான நிதியுதவியும் முறையே ரூ 1500, ரூ 25,000 என உயர்த்தப்பட்டுள்ளது. மேலும் விபத்தில் மரணமடையும் உறுப்பினரின் குடும்பத்திற்கு ரூ 1,00,000 என நிதியுதவிகள் வழங்கப்பட அரசு உத்தரவிட்டுள்ளது. கிராமிய கலைஞர்கள் இவ்வாரியத்தில் உறுப்பினராக பதிவு செய்துக் கொள்ள வேண்டும் என வ.கலையரசி  தெரிவித்தார்.  தொடர்ந்து வாரியத்தின் உறுப்பினர்களுக்கு நலவாரியத்தின் அடையாள அட்டைகளை வழங்கினார். மாவட்ட அரசு இசைப்பள்ளியில் பயின்று தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கினார். கலை பண்பாட்டுத்துறை உதவி இயக்குநர் பா.ஹேமநாதன், இசைப்பள்ளி தலைமையாசிரியர் சு.சங்கரராமன் ஆகியோர் விழா ஏற்பாடுகளை செய்திருந்தனர்.