குடியுரிமை சட்டத்துக்கு எதிராக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றுங்கள்: கு.ராமகிருட்டிணன் திருப்பூரில் பேட்டி

 


குடியுரிமை சட்ட விவகாரத்தில் தமிழ்நாடு அரசு தங்களது எண்ணங்களை மாற்றிக்கொண்டு, சட்டத்துக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என கு.ராமகிருட்டிணன் திருப்பூரில் கூறி உள்ளார்.


திருப்பூர் செல்லாண்டியம்மன் துறை பகுதியில், 3 வது நாளாக குடியுரிமை சட்டத்துக்கு எதிராக இஸ்லாமிய அமைப்பினர் இணைந்ந்து போராட்டங்கள் நடத்தி வருகிறார்கள். இதில், த.பெ.தி.க., கு.ராமகிருட்டிணன் தமுமுக நிர்வாகி நெல்லை நயினார் உள்ளிட்டோர் சிறப்புரையாற்றினார்கள்.


கு.ராமகிருட்டிணன் செய்தியாளர்களிடம் கூறியது: குடியுரிமை சட்டத்தை எதிர்த்து கடந்த ஒரு மாதமாக தமிழ்நாட்டிலே முஸ்லிம்களும், பொதுமக்களும் அமைதியாக போராடி வருகின்றனர். கடந்த 4 நாட்களுக்கு முன வண்ணாரப்பேட்டையில் அமைதியாக போராட்டம் நடத்தியவர்கள் மீது காவல் துறை தாக்குதல் நடத்தியது. இதை கண்டித்து தமிழகம் முழுவதும் போராடட்ம நடந்து வருகிறது. சட்டப்பேரவையில், குடியுரிமை சட்டத்தை வாபஸ் பெற முடியாது என சபாநாயகர் அறிவித்து இருக்கிறார். ஆனால் இதை 9 மாநிலங்கள் எதிர்த்து தீர்மானம் நிறைவேற்றி இருக்கின்றன. குடியுரிமை சட்டத்தை கொண்டு வந்த பாஜகவை டெல்லி தேர்தலில் மண்ணை கவ்வ செய்து உள்ளனர். இதை எடப்பாடி அரசு புரிந்து கொள்ள வேண்டும்.குடியுரிமை சட்டத்தை கொண்டு வந்தவர்களையே டெல்லியில் மக்கள் தூக்கி எறிந்திருக்கிறார்கள். அவர்களை ஆதரிக்கின்ற அரசு என்ன நிலை ஆகும் என்பதை உணர்ந்து தமிழ்நாடு அரசு எண்ணங்களை மாற்றி கொள்ள வேண்டும். இன்னும் காலம் இருக்கிறது. குடியுரிமை சட்டத்தை எதிர்த்து சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். தமிழ்நாடு அரசு உரிய நியாயம் வழங்க வேண்டும். அதுவரை இந்த போராட்டங்கள் நடைபெறும் என்றார்.