தம் அடிச்சதை தட்டி கேட்டவரை வெட்டித் தீர்த்த கொடூர இளைஞர்கள்!!

புதுச்சேரியில் சிகரெட் பிடித்ததை தட்டிகேட்ட வியாபாரிகளை மூன்று இளைஞர்கள் கத்தியால் வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பான சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளது.


புதுச்சேரி அருகே திருக்கனூர் பகுதியைச் சேர்ந்தவர் திருஞானம். இவர் அதே பகுதியில் பெட்டி கடை வைத்துள்ளார். இந்நிலையில் இவரது பெட்டி கடை அருகே உள்ள சலூனுக்கு 3 இளைஞர்கள் முடி திருத்தம் செய்ய வந்துள்ளனர். அப்போது அவர்களை 30 நிமிடம் காத்திருக்குமாறு முடி திருத்துபவர் கூறியிருக்கிறார். இதனையடுத்து அந்த இளைஞர்கள் கடை அருகே அமர்ந்துகொண்டு சிகரெட் பிடித்துள்ளனர். அப்போது பெட்டி கடையிலிருந்த திருஞானம் இங்கு சிகரெட் பிடிக்கக்கூடாது என எச்சரித்துள்ளார். இதனால் இளைஞர்களுக்கும், திருஞானத்திற்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.


இதில் ஆத்திரமடைந்த இளைஞர்களில் ஒருவன் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து, திருஞானத்தை வெட்ட முயன்றார். அதனை அவர் தடுக்க முயன்றபோது, வலது கையில் பெரிய வெட்டு விழுந்தது. இதில் அவர் படுகாயமடைந்து கீழே விழுந்தார். திருஞானத்தின் அலறல் சத்தம் கேட்டு, அருகிலேயே கடை வைத்துள்ள திருஞானத்தின் தம்பி உமாபதி சம்பவ இடத்திற்கு ஓடி வந்தார்.
அங்கு தனது அண்ணன் ரத்த வெள்ளத்தில் கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தார். மேலும் திருஞானத்தை தாக்காமல் இருக்க உமாபதி தடுக்க முயன்றார். ஆனால் அந்த இளைஞர் அவரையும் கத்தியால் வெட்டினார்.


பின்னர் இருவரின் அலரல் சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் ஓடி வந்து அந்த இளைஞர்களை பிடிக்க முயன்றனர். ஆனால் அவர்கள் கத்தியை காட்டி மிரட்டிவிட்டு இருசக்கர வாகனத்தில் தப்பி சென்றுவிட்டனர். உடனே பொதுமக்கள் இருவரையும் மீட்டு ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.


தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த திருக்கனூர் காவல்நிலைய போலீசார், அங்குள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து, வியாபாரிகளை வெட்டிவிட்டு தப்பியோடிய இளைஞர்களை தீவிரமாக தேடி வருகின்றனர். மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள கடை வீதியில் நடைபெற்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.