முடங்கிய தொழில்கள் மூச்சுவிட வாய்ப்பு... சிறு குறு தொழில்களுக்கு ரூ.3 லட்சம் கோடியை கடனா தர்றாங்களாம்...நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன் சொல்றாங்க

பிரதமர் நரேந்திரமோடி நாட்டில் ரூ.20 லட்சம் கோடியில் நிவாரண தொகுப்பினை அறிவித்து இருந்தார். அந்த தொகை எப்படி பயன்படுத்தப்படும் என்பது குறித்து மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன் விளக்கினார்.இதுகுறித்து மத்திய அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் பேசியது:


’சுய சார்பு பாரதம்’ உருவாக்குவதே பிரதமரின் நோக்கம்; பல்வேறு தரப்பினரும் ஆலோசித்து இந்த சிறப்பு தொகுப்பு உருவாக்கப்பட்டு உள்ளது. தொலைநோக்குப்பார்வையுடன் இந்த திட்டத்தை பிரதமர் முன்வைத்துள்ளார்.


சுயசார்புத் திட்டம் என்பது உலகத்திலிருந்து இந்தியாவை தனிமைப்படுத்திக் கொள்வது அல்ல.


உள்நாட்டு தொழில்களை வலுப்படுத்துவதே திட்டத்தின் சாராம்சம்.


பி.பி.இ., கிட் போன்ற மருத்துவ உபகரணங்கள் தயாரிப்பில் நாம் தன்னிறைவை எட்டி உள்ளோம்.


ஏழை, எளிய மக்களுக்காக இலவச சமையல் கேஸ் உள்ளிட்டவை தரப்பட்டு உள்ளன. ஜன் தன்,, ஆதார் மூலம் பயனாளிகளுக்கு திட்டங்கள் நேரடியாக சென்று சேர்ந்துள்ளன.


மின்சாரத்துறையில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளால் நாடு தன்னிறைவை அடைந்தது. 


உள்ளூர் வர்த்தக பொருட்களை உலகளவில் கொண்டு சேர்க்க இத்திட்டம் உதவும். 


மக்களின் பிரச்சினைகளை தீர்க்க பல்வேறு துறைகளில் சிறப்பான செயல்பாட்டை நோக்கி தயாராகி உள்ளோம்.


41 கோடி ஜன் தன் கணக்குகளுக்கு பணம் நேரடியாக வழங்கப்பட்டு உள்ளது.


சிலநாட்கள் தொடர்ந்து பொருளாதாரம் குறித்த அறிவிப்புகள் வெளியிடப்படும்.


சிறு தொழில் நிறுவனங்களுக்கு 9 திட்டங்கள்; குறு நிறுவனங்களுக்கு 6 திட்டங்கள் உள்பட 15 திட்டங்கள் செயல்படுத்தப்படும். 


சிறுகுறு நிறுவனங்களுக்கு உடனடி ரூ. 3 லட்சம் கோடி கடன் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். இதில் 45 லட்சம் நிறுவனங்கள் பயன்பெறும். நான்காண்டு கால தவணையில் கடன்கள் வழங்கப்படும்.


இந்த திட்டம் அக்டோபர் 31 வரை செயல்படுத்தப்படும். 


கடன்பெறும் நிறுவனங்கள் முதல் ஓராண்டுக்கு கடனை திருப்பி செலுத்த வேண்டியது இல்லை. 4 வருட தவணையில் செலுத்த வேண்டும். 


இதன்மூலம் சிறுகுறு நிறுவனங்களுக்கு புதிய பரிணாமம் கிடைக்கும். 


இது தவிர சிறு குறு நிறுவனங்கள் கடனை அடைக்க ரூ.20 ஆயிரம் கோடி துணைக்கடன் வழங்கப்படும். இதன்மூலம் 2 லட்சம் நிறுவனங்கள் பயன்பெறும்.


இந்த கடனுக்கு பிணை தேவையில்லை. 


சிறு குறு நிறுவனங்கள் என்பதற்கான வரையறை மாற்றி அமைக்கப்பட்டுள்ளதால் நிறைய பேர் பயன்பெறுவார்கள்.


சிறுகுறு நிறுவனங்களுக்கான நிதியமாக ரூ.50 ஆயிரம் கோடி வழங்கப்படும். 


 ரூ.1 கோடிக்கும் குறைவான முதலீடு கொண்ட நிறுவனங்கள் சிறு நிறுவனமாக கருத்தில் கொள்ளப்படும். 


ரூ.5 கோடியாக இருந்த குறு தொழில் வரம்பு ரூ.10 கோடியாக உயர்த்தப்பட்டு உள்ளது.


ரூ.20 கோடிக்கும் குறைவான முதலீட்டில் இயங்குபவை நடுத்தர நிறுவனமாக கொள்ளப்படும். 


உற்பத்தி மற்றும் சேவைத்துறை இரண்டுமே ஒரே வரையறைக்குள் கொண்டு வரப்படும்.


ரூ.200 கோடி வரையிலான டெண்டர்கள் உலகளாவிய டெண்டராக இருக்காது. 


வங்கி அல்லாத நிறுவனங்கள், வீட்டுக்கடன் நிறுவனங்களுக்கு ரூ.45 ஆயிரம் கோடி கடனாக வழங்கப்படும். 


அடுத்த 3 மாதங்களுக்கு இ.எஸ்.ஐ., பி.எப்., ஐ மத்திய அரசே செலுத்தும் இதற்கு ரூ.6750 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. 


மின்விநியோக நிறுவனங்களுக்கு ரூ.90 ஆயிரம் கோடி கடனாக வழங்கப்படும்.


அரசு ஒப்பந்ததாரர்கள் கூடுதலாக 6 மாதங்கள் அவகாசம் எடுத்துக் கொண்டு பணிகளை முடிக்க முடியும்.


வருமான வரி கணக்குத் தாக்கல் செய்ய மேலும் 3 மாதங்களுக்கு அவகாசம் நீட்டிக்கப் பட்டு உள்ளது.


 நவம்பர் மாதம் கணக்கு தாக்கல் செய்யலாம்.