அவசர தேவைக்கு ரூ.15 ஆயிரம் கடன் கேட்டாரா கலெக்டர்? மெசேஞ்சர் மாபியாவால் திருப்பூரில் பரபரப்பு

 திருப்பூரில் பேஸ்புக்கில் உள்ள பல்வேறு நபர்களை குறிவைத்து, போலி ஐ.டி., மூலம் பணம் பறிக்கும் கும்பல் ஒன்று திருப்பூர் கலெக்டர் விஜயகார்த்திகேயன் பெயரில் ஐ.டி., ஒன்றை உருவாக்கி 15 ஆயிரம் ரூபாய் பணம் கேட்டு மெசேஜ் செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்ப்படுத்தி உள்ளது.திருப்பூரை சார்ந்த பேஸ்புக் பயன்படுத்தும் நபர்களிடம் நூதன முறையில் பணம் பறிப்பதற்கு வட இந்திய கொள்ளை கும்பல்கள் புதுபுது ஐடியாக்களை பயன்படுத்தி பணம் பறிக்கிறார்கள். அந்த வகையில் சில நாட்களாக திருப்பூரை சேர்ந்த பேஸ்புக் பயன்படுத்தும் நபர்களுக்கு, நன்கு தெரிந்த நபர்களின் ஐ.டி.,யில் இருந்து மெசெஞ்சரில் சாதாரணமாக பேசுவது போல ஆரம்பித்து, அவசர தேவைக்கு பணம் வேண்டும் என்று மெசேஜ் மூலமே பணம் கேட்கிறார்கள். அடுத்த நாளே திருப்பி அனுப்பி விடுவதாகவும் அவசர தேவை என்றும் ஆளைப்பொறுத்து 10 ஆயிரம் முதல் 15 ஆயிரம், 20 ஆயிரம் என கேட்கிறார்கள். அவ்வளவு பணம் இல்லை என்று பதில் அனுப்புபவர்களிடம் சரி ஒரு ஆயிரமாவது கிடைக்குமா? எனக் கேட்டு., அதை உடனே கூகுள் பே மூலம் அனுப்ப சொல்லி அவசரப்படுத்துகிறார்கள். 


இவ்வாறு பெரிய மனிதர் கேட்கிறார் ஏதாவது அவசரமாக இருக்கும் என 1000 முதல் 10000 வரை பணம் அனுப்பி விட்டு ஏமாந்து வெளியே சொல்லாமல் இருப்பவர்கள் பலர். முக்கியமான நண்பர், உறவினர், கல்லூரி பேராசிரியர், அரசு அதிகாரிகள் போன்றவர்களின் ஐ.டியில் இருந்து மெசேஜ் வருவதால் துவக்கத்தில் பலரும் பணம் அனுப்பி ஏமாற ஆரம்பித்தனர். 

இப்படி பணம் கேட்டு மெசேஜ் செய்யும் ஆசாமிகள் இன்று திருப்பூர் கலெக்டர் விஜயகார்த்திகேயன் பெயரிலேயே போலி ஐ.டி., ஒன்றை உருவாக்கி திருப்பூரை சேர்ந்த தொழிலதிபர்களிடம் ரூ.15 ஆயிரம் பணம் கேட்டு மெசேஜ் அனுப்பி உள்ளனர். அவசரத்தில் நண்பருக்கு அனுப்ப வேண்டி இருக்கிறது. நாளை அனுப்பி விடுகிறேன் என்று கலெக்டரின் பெயரிலேயே பணம் கேட்டதால் பெரும் அதிர்ச்சி ஏற்ப்படு உள்ள்து. திருப்பூர் கலெக்டர் விஜயகார்த்திகேயன் சமூக வலைத்தளங்களில் ஏக்டிவாக இருப்பவர், இதனால் சில மணி நேரத்திலேயே இந்த சம்பவம் ட்விட்டர், பேஸ்புக்கில் தீயாக பரவியது.

 இந்த சம்பவம் குறித்து சமூக ஆர்வலர் சுந்தரபாண்டியன் மூலமாக திருப்பூர் கலெக்டர் விஜயகார்த்திகேயனுக்கு தெரிவிக்கப்பட்டதும், அவர் அந்த போலி ஐ.டி., குறித்து போலீசில் புகார் செய்து இருப்பதாக கூறி உள்ளார்.

 ஆட்டை கடித்து மாட்டை கடித்து மனுசனை கடித்த கதையாக கடைசியில் கலெக்டர் பெயரிலேயே ஆட்டைய  போட துணிந்த வடநாட்டு கும்பலை பிடித்து சிறையில் தள்ள வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து உள்ளது. இது போல கடந்த சில நாட்களில் திருப்பூரை சேர்ந்த பல பேருக்கு மெசேஞ்சர் மெசேஜ்கள் வந்துள்ளன. எங்கோ மறைவில் உட்கார்ந்து கொண்டு, போலீஸ் இன்ஸ்பெக்டர் ஐ.டி., உள்பட பல ஐ.டி.,கள் மூலம் மெசேஜ் அனுப்பிய அத்தணை ’மெசெஞ்சர் மாபியா’ வையும் திருப்பூர் பொதுமக்களிடம் புகாரினை பெற்று சட்டப்படி தண்டிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.