தூத்துக்குடியில் கனமழை ! – சாலைகளில் வெள்ளமாய் தேங்கிய மழை நீரால் வீட்டுக்கு செல்ல முடியாமல் தவிக்கும் மாணவ மாணவிகள் ! கனமழை எச்சரிக்கை விடுத்தும் பள்ளிகளுக்கு விடுமுறை விடாதது ஏன் ?


தூத்துக்குடி மாவட்டத்தில் கனமழை பெய்து வரும் நிலையில் சாலைகளில் ஆங்காங்கே பெருமளவில் மழைநீர் தேங்கியுள்ளது. 

இந்நிலையில் மாவட்ட நிர்வாகம் பள்ளிகளுக்கு முன்கூட்டியே விடுமுறை அறிவிக்காததால் காலையில் பள்ளிக்கு சென்ற மாணவ மாணவிகள் பத்திரமாக வீடுகளுக்கு திரும்புவார்களா என பெற்றோர்கள் பரிதவித்து வருகின்றனர்.

தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளது. வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்று முதல் 28ஆம் தேதி





வரைக்கும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் கணித்துள்ளது. 


டெல்டா மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக அறிவித்துள்ள நிலையில் பல மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது,

வளிமண்டல மேலடுக்குச் சுழற்சி அடுத்த 24 மணி நேரத்தில் தீவிரமாகி காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 


இது மேலும் மேற்கு வடமேற்கு திசையில் வரும் நாட்களில் தமிழக கரையை நோக்கி நகரக் கூடும் என்றும் , இன்று ராமநாதபுரம், நாகப்பட்டினம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழை முதல் மிக கன மழையும், 


மதுரை, புதுக்கோட்டை, சிவகங்கை, தேனி, தென்காசி, திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, டெல்டா மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும் பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவித்தது.


நாளைய தினம் ராமநாதபுரம், புதுக்கோட்டையில் இடி மின்னலுடன் கூடிய கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. திருநெல்வேலி,தூத்துக்குடி, கன்னியாகுமரி, கடலூர், விழுப்புரம், டெல்டா மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. 


தென் மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

இதனால் திருவாருர் உட்பட பல மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. 


தூத்தக்குடி மாவட்டத்தில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்த நிலையில், இன்று காலை முதல் அடை மழை பெய்து வருகிறது. பின்னர் பிற்பகல் 12 மணியிலிருந்து இடி மின்னலுடன் கனமழை பெய்து வருகிறது. ஆனால் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்படவில்லை. 


இதனால் காலையில் பள்ளி சென்ற மாணவர்கள் வீடு திரும்ப முடியாமல் பள்ளிகளில் தவித்து வருகின்றனர், பிள்ளைகள் பத்திரமாக வீடு திரும்ப வேண்டுமே என பரிதவித்து வருகின்றனர்.


கனமழை காரணமாக நகரின் பல பகுதிகளிலும், பள்ளி வளாகங்களிலும் தண்ணீர் தேங்கியுள்ளது. இதனால் மாணவ, மாணவிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். 


வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்த நிலையிலும் தூத்துக்குடி மாவட்ட நிர்வாகம் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்காதது மாணவ மாணவியர்களின் பெற்றோர்கள் மத்தியில் கடும் அதிருப்த்தியை ஏற்படுத்தியுள்ளது.


தூத்துக்குடி மாவட்ட நிர்வாகம் முன்னதாகவே பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்திருந்தால் இதுபோன்ற பிரச்சனைகள் எழுந்திருக்காது. மாணவ, மாணவிகள் மற்றும் பெற்றோர்கள் நிம்மதி அடைந்திருப்பர். 

இந்நிலையில் இன்று பிற்பகல் முதல் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்படுவதாக மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இந்நிலையில் மழையால் பள்ளிகளில் மாட்டிக் கொண்ட மாணவர்கள் பத்திரமாக வீடு திரும்பவும், மாணவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும், பள்ளி தலைமையாசிரியர்களுக்கு மாவட்ட கல்வி அலுவலர் உத்தரவிட்டுள்ளார்.

Previous Post Next Post