முழுநேர பொது முடக்கம். முடங்கிய கோயம்புத்தூர் மாநகரம்.


கொரோனா தொற்று உருமாறி, ஒமிக்ரான் தொற்று மூலம் உலக நாடுகள் முழுவதுமுள்ள மனித சமூகத்தை அச்சுறுத்தி வருகிறது.

 இந்த நிலையில் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அனுதினமும் உயர்ந்து வரும் நிலையில், ஒமிக்ரான் தொற்று மேலும் அதிகரிக்கக்கூடும் என்று மருத்துவ வல்லுநர்கள், அறிவியலார்கள் எச்சரித்துள்ளனர்.

 இதையடுத்து தமிழகத்தில் வார இறுதி நாட்களான ஞாயிற்றுக்கிழமைகளில், முழுநேர பொது முடக்கம் அமல்படுத்தப்படும் என தமிழக அரசு அறிவித்திருந்தது.


இந்த நிலையில் இன்று ஞாயிற்றுக்கிழமை முழுநேர பொது முடக்கம் அமலுக்கு  வந்துள்ளதை அடுத்து, எறும்பு போல் சுறு சுறுப்பாய் பணியாற்றும் கோவை தொழிலாளர்கள் வீட்டில் முடங்கி கிடக்கின்றனர்.கோவை நகர்ப் பகுதிகளில் உள்ள அனைத்து கடைகள் அடைக்கப் பட்டும், கணபதி,ஆவாரம் பாளையம், பீளமேடு, பாப்பாநாய்க்கன்பாளையம், சிட்கோ பகுதிகளில் உள்ள சிறு, குறு, பெரும் தொழிற்சாலைகளிலும் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளன.


பொது பேருந்து முடக்கத்தால், உக்கடம், காந்திபுரம், சிங்காநல்லூர் பேருந்து நிலையங்களும், தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் வந்து செல்கிற ஒப்பணக்கார வீதி, காந்திபுரம் கிராஸ்கட் ரோடு, பெரியகடைவீதி, ரங்கேகவுடர் வீதி, ராஜவீதி, தியாகி குமரன் மார்க்கெட், சாய்பாபா காலனி, ஆர்.எஸ்.புரம் ஆகிய பகுதிகள் முழுவதும் கடைகள் அடைக்கபட்டதால், மக்கள் நடமாட்டமின்றி,வெறிச்சோடியதால், நகர் பகுதி சாலைகள் அனைத்தும் வெறிச்சோடி காணப்பட்டது.


மேலும் பால், மருந்தகம், பத்திரிகை விற்பனை உள்ளிட்ட அத்தியாவசிய கடைகளைத் தவிர மற்ற கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டுள்ளன. உணவு விடுதிகளில் பார்சல் மூலமே உணவு விற்பனை நடைபெறுகிறது. காவல்துறையினர் ஆங்காங்கே காவல் சோதனை சாவடி அமைத்து, வாகன தணிக்கையில் தேவையற்று வெளியே ஊர் சுற்று பவர்களை போலீசார் எச்சரித்தும், அபராதமும் விதிக்கின்றனர். கோவை சர்வதேச - விமான நிலையத்தில் விமான போக்குவரத்தும், கோவை ரயில் நிலையத்திலும் ரயில்கள் வழக்கம்போல் வந்து சென்றன.

கோவையிலிருந்து 

தமிழ் அஞ்சல் செய்தியாளர் நாராயணசாமி.

Previous Post Next Post