தூத்துக்குடி எஸ்பி அலுவலகம் முன்பு மருத்துவ தம்பதியர் திடீர் தர்ணா :மருத்துவத்துறை துணை இயக்குனர் மற்றும் கண்காணிப்பாளர் துன்புறுத்துவதாக புகார் - தூத்துக்குடியில் பரபரப்பு.!

மருத்துவத்துறை துணை இயக்குனர் மற்றும் கண்காணிப்பாளர் தங்களை துன்புறுத்துவதாக கூறி தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் முன்பு தரையில் அமர்ந்து மருத்துவ தம்பதியினர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால்  பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கீழஈரால் அரசு பொது மருத்துவமனையில் வேலை பார்க்கும் மருத்துவர் ஆனந்த் மற்றும் வனிதா தம்பதியினர், தங்களது 5 வயது மகனுடன் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் முன்பு தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர், இதனால் பரபரப்பு ஏற்பட்டது. 

இதுகுறித்து மருத்துவர் வனிதா செய்தியாளர்களிடம் கூறுகையில், தனது கணவர் மருத்துவர் ஆனந்தும் நானும் கீழ ஈரால் ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவராக பணியாற்றி வருவதாக தெரிவித்த அவர் கடந்த ஐந்து வருடங்களாக பல்வேறு துன்பங்களை அனுபவித்து வருவதாக  தெரிவித்தார்.

தன்னை ஜாதி ரீதியாகவும் பெண் என்பதாலும் என்னிடம் எதையும் வெளிக்காட்ட முடியாததால், எனது கணவரை கடுமையான துன்புறுத்தலுக்கு கோவில்பட்டி மருத்துவத்துறை துணை இயக்குனர் போஸ்கோ ராஜா, கண்காணிப்பாளர் ராஜா இருவரும் சேர்ந்து தங்களை தொந்தரவுக்கு உள்ளாகி வருவதாக தெரிவித்தார். தனது கணவரின் முகத்தில் பேப்பரை வீசி எறிந்து இரண்டு பேரையும் வெளியே போ என சொல்லி அனுப்பி விட்டதாக அவர் தெரிவித்தார்.

இதுகுறித்து  மருத்துவர் ஆனந்த் கூறுகையில் தான் 2017 இல் இருந்து கீழ ஈரால் ஆரம்ப சுகாதார நிலையத்தில் நடமாடும் மருத்துவராக பணியாற்றி வருவதாக தெரிவித்த அவர், கண்காணிப்பாளர் ராஜா தூண்டுதலின்பேரில் கோவில்பட்டி மருத்துவத்துறை துணை இயக்குனர் போஸ்கோ ராஜா தனக்கு தேவையில்லாத மெமோ கொடுத்து வருவதாக புகார் கூறினார்.

இதுகுறித்து சென்னையைச் சார்ந்த தங்களது இயக்குனர்,  தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் ஆகியோருக்கு பலமுறை புகார் அளித்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என குற்றம் சாட்டினார். தொடர்ந்து நியாயம் கிடைக்காததால் ,மருத்துவரான எங்களுக்கே இந்த நிலை என்ற காரணத்தினால் இன்று தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் தானும் தனது மனைவி மற்றும் குழந்தையுடன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட வேண்டிய சூழலை ஏற்படுத்தி விட்டனர் என வருத்தத்துடன் குறிப்பிட்டார்.

தொடர்ந்து அங்கு பணியில் இருந்த காவலர்கள் அவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் மனு கொடுக்க ஏற்பாடு செய்ததை தொடர்ந்து அவர்கள் போராட்டத்தை கைவிட்டு மனு அளித்தனர். இதனால் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு காணப்பட்டது.  


Ahamed

Senior Journalist

Previous Post Next Post