தமிழகம் :மாணவர்கள் மத்தியில் அதிகரிக்கும் காய்ச்சல்: பள்ளிகளுக்கு விடுமுறையா? - அமைச்சர் அன்பில் மகேஷ் பதில்.!

தமிழகத்தில் குழந்தைகள் குறிப்பாக மாணவர்கள் மத்தியில் காய்ச்சல் அதிகரித்து வரும் நிலையில், பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுமா என்பது குறித்து பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பதிலளித்துள்ளார். 

சமீப காலமாக தமிழகத்தில் குழந்தைகள் மத்தியில் காய்ச்சல் வேகமாகப் பரவி வருகிறது. சென்னையில் பன்றிக் காய்ச்சலால் 100-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். 250-க்கும் மேற்பட்டோருக்கு டெங்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. அதிக அளவிலான குழந்தைகளுக்குக் காய்ச்சல் பரவி வருகிறது. 

புதுச்சேரியில் பரவி வரும் ஃப்ளூ காய்ச்சல் காரணமாக 150 குழந்தைகள் உட்பட 192 பேர் சிகிச்சையில் உள்ளனர். காய்ச்சலில் எந்தவித வைரஸும் கண்டறியப்படாத நிலையில், அங்கு ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை பள்ளிகளுக்கு செப்.25ஆம் தேதி வரை 9 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டது. 

புதுச்சேரியைப் போல தமிழகத்திலும் காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுமா என்பது குறித்து பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பதிலளித்துள்ளார்.

இதுகுறித்துத் தனியார் தொலைக்காட்சியிடம் பேசிய அவர், ''இதுகுறித்து பள்ளிக் கல்வித்துறை தனித்து முடிவெடுக்க முடியாது. முதலமைச்சர், பொது சுகாதாரத் துறை அமைச்சர் மற்றும் அதிகாரிகளுடன் கலந்துபேசி உரிய முடிவெடுப்பர்'' என்று தெரிவித்தார்.

Ahamed

Senior Journalist

Previous Post Next Post